சோனி மற்றும் ஜீ நிறுவனங்களின் இணைப்பு விரைவில் சாத்தியமாகுமா?
ஜீ (Zee Entertainment Enterprises) மற்றும் சோனி (Sony Pictures Networks India) ஆகிய இரு பெரும் பொழுதுபோக்கு நிறுவனங்களின் இணைப்பு சாத்தியமாகும் நிலையில் இல்லாத நிலையை எட்டியிருக்கிறது. மேற்கூறிய இந்த இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு டிசம்பர் 21ம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை எழுப்பியிருக்கிறது ஜீ நிறுவனம். ஆனால், மறுபுறம் சோனி நிறுவனமோ, இணைப்பிற்கான காலக்கெடுவை நீட்டிப்பதற்கான ஒப்புதலை தாங்கள் இன்னும் வழங்கவில்லை என அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜீ நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் 4.7% வரை சரிவைச் சந்தித்திருக்கின்றன.
மாபெரும் பொழுதுபோக்கு சாம்ராஜ்யம்:
ஒன்றிணைந்த ஜீ மற்றும் சோனி நிறுவனத்தை யார் நிர்வகிப்பது என்பது குறித்த பிரச்சினை இரு நிறுவனங்களுக்கிடையிலும் எழுந்திருக்கிறது. ஜீ நிறுவனத்தின் சிஇஓவான புனித் கோயன்கா ஒருங்கிணைந்த நிறுவனத்தை வழிநடத்த வேண்டுமா அல்லது சோனி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் NP சிங் வழிநடத்த வேண்டுமா என்று. இரு நிறுவனங்களும் சேர்ந்து இந்தியாவில் 70-க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு சேனல்கள் மற்றும் இரண்டு OTT தளங்களை தங்கள் கைவசம் வைத்திருக்கின்றன. இந்த இரு நிறுவனங்களும் இணையும் பட்சத்தில், 10 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான மாபெரும் பொழுதுபோக்கு சாம்ராஜ்யமாக இந்தியாவில் அது உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.