
ஆன்லைன் கேமிங் பில்லுக்குப் பிறகு உங்கள் கேம் வாலட்டில் போடப்பட்ட பணத்தின் கதி என்ன?
செய்தி முன்னோட்டம்
2025 ஆம் ஆண்டு ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றிய பிறகு, இந்தியாவின் முன்னணி ரியல்-பணம் சார்ந்த கேமிங் (RMG) நிறுவனங்களான Dream11, Mobile Premier League (MPL), Zupee, Winzo மற்றும் My11Circle ஆகியவை போட்டிகள் மற்றும் கட்டண விளையாட்டுகளை வழங்குவதை நிறுத்திவிட்டன. கடந்த வாரம் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த மசோதா, அனைத்து வகையான ஆன்லைன் பண விளையாட்டுகளையும் தடை செய்கிறது. இவை பயனர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணத்தை டெபாசிட் செய்து ரொக்க வெகுமதிகளை வெல்லும் நம்பிக்கையுடன் விளையாடப்படும் சூதாட்ட விளையாட்டுகள் என வரையறுக்கப்படுகின்றன.
மணி வாலெட்
ஆப்-இல் செலுத்தப்பட்ட பணத்தின் நிலை
இந்த திடீர் நடவடிக்கை பல பயனர்களை தங்கள் செயலியில் உள்ள பணப்பைகளில் சேர்த்த பணத்தைப் பற்றி கவலைப்பட வைத்துள்ளது. பயனர்கள் இப்போது இந்த தளங்களில் இருந்து தங்கள் இருப்பை எப்படி, எப்போது எடுக்கலாம் என்பது குறித்த தெளிவை எதிர்பார்க்கின்றனர். இது குறித்து நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன. MPL இந்த புதிய சட்டத்தை முழுமையாகப் பின்பற்றுவதாக அறிவித்து,"இந்தியாவில் MPL தளத்தில் பணம் சம்பந்தப்பட்ட அனைத்து கேமிங் சலுகைகளையும் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம்". "எங்கள் முதன்மையான முன்னுரிமை எங்கள் பயனர்கள். புதிய வைப்புத்தொகைகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்றாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் இருப்புகளை தடையின்றி எடுக்க முடியும். இருப்பினும், ஆன்லைன் பண விளையாட்டுகள் இனி MPL தளத்தில் கிடைக்காது," என்று MPL LinkedIn-இல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மற்ற நிறுவனங்கள்
மற்ற நிறுவனங்களும், வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்ப பெறும் வழியை தெரிவித்துள்ளது
ZUPEE,"எங்கள் அனைத்து பயனர்களும் எந்த நேரத்திலும் எந்த இடையூறும் இல்லாமல் தங்கள் இருப்புகளைத் தடையின்றி எடுக்கலாம்" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. DREAM11 நிறுவனமும், பயனர்களின் தொகை திருப்பித் தரப்படும் என்று உறுதியளித்தது. "டிபாசிட் இருப்பு ஆகஸ்ட் 29ஆம் தேதிக்குள் திருப்பித் தரப்படும். இது குறித்த கூடுதல் அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்" என்று நிறுவனம் அதன் செயலியில் தெரிவித்துள்ளது. வெற்றிப் பணத்தை நேரடியாக வங்கிக் கணக்குகளுக்கு எடுக்கலாம் என்றும், ஆனால் தள்ளுபடி போனஸ்கள் மற்றும் தள்ளுபடி புள்ளிகள் திரும்பப் பெற முடியாது என்றும், ஆகஸ்ட் 23, 2025க்குள் அவை அகற்றப்படும் என்றும் அது தெளிவுபடுத்தியது. ஆகஸ்ட் 25, 2025 திங்கள் முதல் பயனர்கள் பணம் எடுக்க முடியும் என்று வின்சோ தெரிவித்துள்ளது.