Loading...
இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா புதிய இறக்குமதி வரி விதிக்க திட்டம்
புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்தி

இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா புதிய இறக்குமதி வரி விதிக்க திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 25, 2026
12:47 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க நிறுவனங்களின் உள்நாட்டு உற்பத்தியைப் பாதிக்கும் வகையில் அதிகப்படியான தொழில்துறை உற்பத்திக்கு மானியம் வழங்குவதாக குற்றம் சாட்டி, இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 16 பொருளாதார நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், கடந்த மார்ச் 11-ஆம் தேதி தொடங்கப்பட்ட விசாரணையின் முடிவுகளை இந்த வாரமே வெளியிட வாய்ப்புள்ளதால் சர்வதேச வர்த்தக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரிவு 301 விசாரணை

அமெரிக்காவின் குற்றச்சாட்டு

1974-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-இன் (Section 301) கீழ் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாடுகளின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

சம்பந்தப்பட்ட 16 நாடுகளும் தங்களது உள்நாட்டு தொழிற்சாலைகளுக்கு வழங்கும் அரசு மானியங்கள் மற்றும் நிதியுதவிகள் காரணமாக தேவைக்கு அதிகமான உற்பத்தித் திறன் உருவாகியுள்ளதாகவும், இதனால் உலகச் சந்தையில் மலிவு விலை பொருட்கள் குவிக்கப்பட்டு அமெரிக்க உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஜேமிசன் கிரீர் குற்றம் சாட்டியுள்ளார்.

வரம்பு

வரி விதிப்பின் வரம்பு

இந்தப் புதிய வரி விதிப்பானது இலக்கு வைக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், எஃகு, அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல் துறை சார்ந்த பொருட்கள் ஏற்கனவே தேசியப் பாதுகாப்பு விதிகளின் கீழ் தனி வரிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அவற்றுக்கு இந்தப் புதிய வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் வெளிநாட்டு விநியோகச் சங்கிலிகளில் கட்டாய உழைப்பு தொடர்பான விசாரணையின் அடிப்படையில் விதிக்கப்பட்ட 10 முதல் 12.5 சதவீத வரிகளுக்கு மேலாக இந்தப் புதிய வரிகள் விதிக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

வரி விகித வேறுபாடு

நாடுகளுக்கு இடையிலான வரி விகித வேறுபாடுகள்

அமெரிக்காவுடன் ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு ஒட்டுமொத்த வரி விகிதம் 15 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக இருக்கக்கூடும்.

ஆனால், இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் வாஷிங்டனுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்த விதிமுறைகளைப் பொறுத்து ஒப்பீட்டளவில் அதிக வரிகளை எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக, சீனாவின் மானியங்கள் உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுவதால், சீனா மீது மிக அதிகப்படியான வரிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT