இந்திய பங்குச் சந்தை சரிந்ததா? அமெரிக்க உயர் அதிகாரி பகிர்ந்த போலி செய்தி; அம்பலமான உண்மை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் கிரீன் கார்டு கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை முற்றிலும் சரிவை சந்தித்ததாகப் பரப்பப்பட்ட போலி செய்தியை, அமெரிக்க தொழிலாளர் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தோணி டி'எஸ்போசிட்டோ தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசின் இந்த உயர் அதிகாரி, இந்திய பங்குச் சந்தை குறித்து பரப்பப்பட்ட தவறானத் தகவலை கிண்டல் செய்யும் விதமாக பகிர்ந்ததற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பலத்த எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். கூடுதல் விபரங்கள் இங்கே:-
போலி செய்தி
போலி செய்தியின் பின்னணியும் உண்மை நிலவரமும்
அமெரிக்க வலதுசாரி அரசியல் விமர்சகரான பென்னி ஜான்சன், டிரம்ப் நிர்வாகத்தின் கிரீன் கார்டு தடையால் ரிலையன்ஸ், எஸ்பிஐ, எல்ஐசி உள்ளிட்ட இந்திய நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்ததாக ஒரு போலி வரைபடத்தைப் பகிர்ந்திருந்தார்.
இந்த எக்ஸ் பதிவிற்கு பின்னூட்டமிட்ட அந்தோணி டி'எஸ்போசிட்டோ "Ruh roh" எனக் குறிப்பிட்டு இந்தியர்களைக் கேலி செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார்.
ஆனால், அமெரிக்க அரசின் அறிவிப்பு வெளியாவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பே அன்றைய தினத்திற்கான இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையான காரணம்
இந்திய பங்குச் சந்தையின் உண்மையான காரணம் மற்றும் மீட்சி
அக்டோபர் 8 அன்று சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்ததற்கு சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்றமே முதன்மை காரணங்களாகும்.
மேலும், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) காலையில் வர்த்தகம் தொடங்கியதும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகளின் விலையேற்றத்தால் இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் வலுவான ஏற்றத்தைக் கண்டது.
இதன் மூலம் பரப்பப்பட்ட தகவல்கள் முற்றிலும் போலி என்பது சமூக வலைதள உண்மை சரிபார்ப்பு மூலமும் அம்பலமானது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Ruh roh. https://t.co/d78va5tw7Y
— Inspector General Anthony D'Esposito (@USLaborIG) October 9, 2026
வர்த்தக உயர்வு
வர்த்தக உயர்வு மற்றும் டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம்
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்து 71,876.10 புள்ளிகளையும், என்எஸ்இ நிஃப்டி 84.60 புள்ளிகள் உயர்ந்து 22,310.40 புள்ளிகளையும் எட்டி வர்த்தகமானது.
குறிப்பாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது நிகர லாபம் 15 சதவீதம் அதிகரித்து ரூ.13,884 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 4 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.
இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகளும் நேர்மறையான ஏற்றத்தை சந்தித்தன.