ரூ.50 கோடிக்கும் மேல் விற்றுமுதல் ஈட்டும் நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டணம்! யுபிஐ MDR குறித்து ஐஐடி மும்பை அறிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் மீது விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வர்த்தகர் தள்ளுபடி வீதக் (MDR) கட்டணங்களை மறுசீரைமைக்க வேண்டும் என ஐஐடி மும்பை அறிக்கை வலியுறுத்தியுள்ளது. வருவாய் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல், மலிவுத் தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையையும் சமநிலையில் பேண வேண்டியது அவசியமாகும். பெரிய வணிகர்களுக்கு மட்டுமே இக்கட்டணங்களை விதிக்க வேண்டும் என்றும், கடன் மறுசெலுத்தல்களை இதில் சேர்க்கக்கூடாது என்றும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
பெரிய வர்த்தகர்கள்
பெரிய வர்த்தகர்கள் மட்டுமே கட்டணத்தை சுமக்க வேண்டும்
ஆண்டுக்கு ரூ.50 கோடி அல்லது அதற்கு மேல் விற்றுமுதல் ஈட்டும் பெரிய வணிக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு MDR கட்டணங்களை வசூலிக்கலாம் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டப்பூர்வமாக யுபிஐ சேவையை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்த நிறுவனங்களிடம் மட்டும் கட்டணம் வசூலிப்பதன் மூலம், என்பசிஐ உத்தேசித்துள்ள வருவாயில் சுமார் 90 சதவீதத்தைப் பெற முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இ-காமர்ஸ் இணையவழி வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கும் நியாயமான கட்டணங்களை வசூலிக்கலாம்.
விலக்கு
கடன் மறுசெலுத்தல்களுக்கு MDR கட்டணத்தில் இருந்து விலக்கு
ரூ.2,000-க்கு மேலான பரிவர்த்தனையாக இருந்தாலும், கடன் வசூல் மற்றும் கடன் இஎம்ஐ தவணை பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட வேண்டும் என ஐஐடி மும்பை பரிந்துரைத்துள்ளது.
இத்தகைய பரிவர்த்தனைகளைக் கட்டணமின்றி வைத்திருப்பது நிதி சேர்க்கையை ஊக்குவிக்கும்.
மேலும், டிஜிட்டல் முறையில் கடனைத் திரும்ப செலுத்தும் கடன் வாங்குபவர்களுக்குக் கூடுதல் நிதிச் சுமை ஏற்படுவதையும் இது தடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி
என்பிசிஐயின் தற்போதைய சுற்றறிக்கை மற்றும் ரிசர்வ் வங்கியின் பங்கு
முன்னதாக செப்டம்பர் 15 அன்று என்பிசிஐ வெளியிட்ட சுற்றறிக்கையில், ரூ.2,000-க்கு மேலான குறிப்பிட்ட வணிக பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்பட்டது.
இதில் ரயில்வே, எரிபொருள், காப்பீடு ஆகியவற்றுக்கு ரூ.5 நிலையான கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தனிநபர்களுக்கு இடையேயான பணப்பரிவர்த்தனைகள் எப்போதும் இலவசமாகவே இருக்கும்.
இந்நிலையில், 2007 செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தின் கீழ், யுபிஐ MDR கட்டணங்களை இந்திய ரிசர்வ் வங்கியே நேரடியாக தீர்மானிக்க வேண்டும் என்றும் அறிக்கை கோரியுள்ளது.