ஸ்விக்கியின் வேடிக்கைப் பதிவில் ஸ்விக்கியையே வறுத்தெடுத்த ட்விட்டர் பயனர்கள்
ட்விட்டர் பயனர் ஒருவர் விமான நிலையம் ஒன்றில், சில நாட்களுக்கு முன்னர், தான் வாங்கிய 'Maggie'யானது அதிக விலையில் விற்பனை செய்வது குறித்து தனது கருத்தைப் பகிர்ந்திருந்தார். தனது ட்விட்டர் பதிவில், மேகி, ரூ.193 விலையில் விமான நிலையத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும், ஏன் இவ்வளவு அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் எனவும் கேள்வியெழுப்பிருந்தார் அவர். ட்விட்டர் பயனரின் இந்தப் பதிவைக் குறிப்பிட்டு ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனமும் தங்கள் ட்விட்டர் கணக்கில் இருந்து, "நாங்கள் வெறும் 14 ரூபாய்க்குத்தான் விற்பனை செய்கிறோம்" எனப் பதிவிட்டிருக்கிறது. ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்டின் இந்த பதிவில், ஸ்விக்கிக்கு எதிராகவே கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்கள் ட்விட்டர் பயனர்கள்.
ஸ்விக்கியை கேலி செய்த ட்விட்டர் பயனர்கள்:
ஸ்விக்கி இன்ஸ்டாமார்டின் இந்த பதிவை சில ட்விட்டர் பயனர்கள் வேடிக்கையாக எடுத்துக் கொண்டாலும், சிலர் ஸ்விக்கி சேவையில் பிடித்தம் செய்யப்படும் அதிகப்படியான கட்டணம் குறித்து கேலி செய்து பதிவிட்டிருக்கிறார்கள். ஸ்விக்கி இன்ஸ்டாமார்டுடைய மேற்கூறிய ட்விட்டர் பதிவின் மறுமொழியில், "10 ரூபாய்க்கு கிடைக்கும் மேகியை, நீங்கள் ஏன் 14 ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள்?" எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார். மற்றொரு பயனரோ, "சமைத்த மேகியை ஸ்விக்கி எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யும்?" எனப் பதிவிட்டிருக்கிறார். இன்னொரு ட்விட்டர் பயனரோ, ஸ்விக்கி ஒரு டெலிவரிக்கு பிடித்தம் செய்யும் ஹேண்டிலிங் கட்டணம் மற்றும் டெலிவரி கட்டணம் குறித்த தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.