Loading...
தீவிரமடையும் டிவிஎஸ் குடும்ப சொத்துப் பிரச்சினை: தந்தை வேணு சீனிவாசனுக்கு பாகப்பிரிவினை நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி வேணு
டிவிஎஸ் குடும்ப சொத்துப் பிரச்சினை தீவிரம்

தீவிரமடையும் டிவிஎஸ் குடும்ப சொத்துப் பிரச்சினை: தந்தை வேணு சீனிவாசனுக்கு பாகப்பிரிவினை நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி வேணு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 16, 2026
07:29 pm

செய்தி முன்னோட்டம்

டிவிஎஸ் தொழில் குழுமக் குடும்பத்திற்குள் சொத்துப் பங்கீடு தொடர்பான சர்ச்சை தற்போது சட்டப்பூர்வ வடிவம் பெற்றுள்ளது. டிவிஎஸ் மூத்த தலைவர் வேணு சீனிவாசனின் மகள் லட்சுமி வேணு, தனது தந்தையின் பிரிவுக்குச் சொந்தமான கூட்டுக் குடும்ப சொத்துக்களில் தனக்கு சம பங்கு கோரி பாகப்பிரிவினை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2005 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ், பூர்வீக சொத்துக்களில் மகனுக்கு இணையான உரிமை மகளுக்கும் உண்டு என்பதை சுட்டிக்காட்டி அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

உரிமை கோரிக்கை

முக்கிய நிறுவனப் பங்குகளில் உரிமை கோரிக்கை

கடந்த 2020 ஆம் ஆண்டு டிவிஎஸ் குடும்பத்திற்குள் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் வேணு சீனிவாசன் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட சொத்துக்களே இந்த சர்ச்சையின் மையமாக உள்ளன.

குறிப்பாக 'விஎஸ் அறக்கட்டளை' மற்றும் பிற ஹோல்டிங் நிறுவனங்கள் வழியாக கையாளப்படும் டிவிஎஸ் ஹோல்டிங்ஸ், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் மற்றும் சுந்தரம்-கிளேட்டன் ஆகிய நிறுவனங்களின் பங்குகளில் தனக்கு சம பங்கு வேண்டும் என லட்சுமி வேணு வலியுறுத்தியுள்ளார்.

குற்றச்சாட்டு

சகோதரர் சுதர்சனுக்கு சாதகமாக சொத்துக்கள் குவிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

2020 ஆம் ஆண்டு பெரிய டிவிஎஸ் குடும்பத்திற்குள் நடந்த ஏற்பாடு என்பது தங்களது உடனடி குடும்பத்திற்குள் நடந்த பாகப்பிரிவினை அல்ல என லட்சுமி வேணு வாதிட்டுள்ளார்.

குடும்ப வணிகத்தை நிர்வகிப்பது என்பது ஒருவருக்கு தனிப்பட்ட உரிமையை வழங்கிவிடாது என்றும், தனது சகோதரர் சுதர்சனுக்கு சாதகமாக சொத்து நலன்கள் குவிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது சட்ட ரீதியான மற்றும் நம்பிக்கைத் துரோக பிரச்சினை எனக் குறிப்பிட்டாலும், சுமுகமான முறையில் தீர்வு காணவே தான் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தாயார் ஆதரவு

மகள் லட்சுமி வேணுவின் கோரிக்கைக்கு தாயார் மல்லிகா சீனிவாசன் பகிரங்க ஆதரவு

இந்த விவகாரத்தில் லட்சுமி வேணுவின் தாயாரும் பிரபல தொழிலதிபருமான மல்லிகா சீனிவாசன் தனது மகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

சுமுகத் தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என தெரிவித்த அவர், "ஒரு தாயாக எனக்கு மகனும் மகளும் எல்லா வகையிலும் சமமானவர்கள்.

சுதர்சனுக்கு குறையாத நியாயமான பங்கு லட்சுமிக்கும் குடும்ப சொத்துக்களில் உள்ளது." எனக் கூறியுள்ளார்.

அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி வெளிப்படையான பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT