புதிய செபி தலைவராக நிதியமைச்சக மூத்த ஐஏஐஎஸ் அதிகாரி துஹின் காந்தா பாண்டே நியமனம்
செய்தி முன்னோட்டம்
இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) புதிய தலைவராக 3 ஆண்டுகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி துஹின் காந்தா பாண்டேவை மத்திய அரசு நியமித்துள்ளது.
ஒடிசா கேடரைச் சேர்ந்த 1987 பேட்ச் அதிகாரியான பாண்டே, பிப்ரவரி 28 ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் மாதபி பூரி புச்க்குப் பிறகு பதவியேற்பார்.
அவருக்கு முன்பிருந்த அஜய் தியாகி மற்றும் யு.கே. சின்ஹா ஆகியோரைப் போலல்லாமல், மாதபி பூரி புச் மூன்று ஆண்டு பதவிக்காலத்திற்குப் பிறகு பதவியிலிருந்து வெளியேறுகிறார்.
இந்திய அரசின் நிதியமைச்சக மூத்த அதிகாரிகளில் ஒருவராக இருந்து தற்போது செபி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள துஹின் காந்தா பாண்டேவின் பின்னணி குறித்து இதில் பார்க்கலாம்.
துஹின் காந்தா பாண்டே
துஹின் காந்தா பாண்டேவின் பின்னணி
துஹின் காந்தா பாண்டே பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும், இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.
இந்த நியமனத்திற்கு முன்பு, அவர் வருவாய்த் துறையின் செயலாளராகவும், நிதிச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தனது பணிக்காலம் முழுவதும், துஹின் காந்தா பாண்டே மத்திய மற்றும் ஒடிசா மாநில அரசுகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (DIPAM), பொது நிறுவனங்கள் துறை (DPE) மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஆகியவற்றில் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
பொருளாதார மற்றும் நிதி விஷயங்களில் தனது சிறந்த அனுபவத்துடன், இந்தியாவின் மூலதனச் சந்தைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை மேற்பார்வையிடுவதில் துஹின் காந்தா பாண்டே முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.