நவம்பர் 1 முதல் ஸ்பேம் மெஸேஜுகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த TRAI
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொலைத்தொடர்பு விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இது நவம்பர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். இந்த புதிய விதியின்படி அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் மொபைல் போன்களில் பெறப்படும் செய்திகளைக் கண்காணிப்பதை மேம்படுத்தும் வகையில் செய்திகளைக் கண்டறியும் திறனை (Message Traceability) செயல்படுத்த வேண்டும். இது பயனர்களுக்கு விளம்பரச் செய்திகள் மற்றும் அழைப்புகளை அடையாளம் காண உதவும், மோசடி அபாயத்தைக் குறைக்கும். இந்த முயற்சியானது இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டாலும், முக்கியமான வங்கிச் செய்திகள் மற்றும் OTP களைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவது குறித்து கவலைகள் உள்ளன.
மெசேஜ் டிரேசபிலிட்டி என்றால் என்ன?
நவம்பர் 1 முதல், உங்கள் மொபைலுக்கு வரும் அனைத்து செய்திகளும் கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். எளிமையான சொற்களில் கூறவேண்டுமென்றால், மோசடி அழைப்புகள் மற்றும் செய்திகளைத் தடுக்க ஒரு புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்படும், இதன்மூலம் அவற்றை அடையாளம் காண்பதை எளிதாக்குகிறது. பயனர்கள் விரும்பினால், தேவையற்ற செய்திகள் அல்லது அழைப்புகளைத் தடுக்கும் விருப்பமும் இருக்கும். ஆகஸ்டில், டெலிமார்க்கெட்டிங் மற்றும் விளம்பரங்கள் தொடர்பான வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து வரும் செய்திகளைத் தடுக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. டெலிமார்க்கெட்டிங் செய்திகள் நிலையான வடிவத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் TRAI வலியுறுத்தியது.