Loading...
டேட்டா இல்லாத மலிவு விலை ரீசார்ஜ் பிளான்கள்: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு
குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை கட்டாயம் வழங்க வேண்டும் என TRAI உத்தரவிட்டுள்ளது

டேட்டா இல்லாத மலிவு விலை ரீசார்ஜ் பிளான்கள்: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 23, 2026
07:40 am

செய்தி முன்னோட்டம்

சாதாரண மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, குரல் அழைப்பு மற்றும் SMS சேவைகள் மட்டும் அடங்கிய குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை கட்டாயம் வழங்க வேண்டும் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ (Vi) உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணையதள சேவையுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை மட்டுமே வழங்கி வருகின்றன. இதனால், ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத அடிப்படை மொபைல் பயனர்களும் தங்களுக்கு தேவையில்லாத டேட்டாவிற்காகச் சேர்த்து அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (13-வது திருத்தம்) ஒழுங்குமுறை, 2026-இன் கீழ் டிராய் இப்புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

புதிய ரீசார்ஜ் விதிகளின் முக்கிய அம்சங்கள்

இணையதள சேவை இல்லாமல், வெறும் குரல் அழைப்புகள் மற்றும் SMS சேவைகளை மட்டும் உள்ளடக்கிய ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டாயம் அறிமுகப்படுத்த வேண்டும்.

30 நாட்கள் மற்றும் அதற்கும் குறைவான நாட்களுக்குச் செல்லுபடியாகும் டேட்டா பிளான்களுக்கு இணையாக இப்புதிய குரல் மற்றும் எஸ்.எம்.எஸ் திட்டங்களும் கிடைக்கப் பெற வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் புதுப்பிக்கக்கூடிய வகையில் இத்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட மாதத்தில் அந்த தேதி இல்லை எனில், அம்மாதத்தின் கடைசி நாளில் புதுப்பித்தல் நிகழும் வகையில் வசதி செய்யப்பட வேண்டும்.

இணையதள வசதி நீக்கப்படுவதால், வழக்கமான டேட்டா திட்டங்களை விட இப்புதிய திட்டங்களின் கட்டணமானது குறிப்பிடத்தக்க அளவு குறைவாகவும், நுகர்வோருக்கு மலிவாகவும் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT