14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கும் டெஸ்லா
செய்தி முன்னோட்டம்
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது உலகளாவிய பணியாளர்களில் 10% க்கும் அதிகமான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
தேவைக்கும் அதிகமான ஆட்கள் வேலை செய்வதால் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெஸ்லா தெரிவித்துள்ளது.
இந்த முடிவினால், உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் பணிபுரியும் 14,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.
"எங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நிறுவனத்தை நாங்கள் தயார்படுத்தும்போது, செலவைக் குறைப்பதற்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் நிறுவனத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பார்ப்பது மிகவும் முக்கியம். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நாங்கள் நிறுவனத்தை முழுமையாக மதிப்பாய்வு செய்துள்ளோம். உலகளவில் 10% க்கும் அதிகமான ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் எலான் மஸ்க்
சமீபத்தில் டெஸ்லா கார் டெலிவரிகளில் வீழ்ச்சி காணப்பட்டது. அதை மீண்டும் அதிகரிக்க டெஸ்லா அதன் EV களில் தொடர்ச்சியான விலைக் குறைப்புகளை அறிமுகப்படுத்தியது.
எலான் மஸ்க், பிரதமர் நரேந்திர மோடியை இம்மாதம் இந்தியாவுக்குச் சென்று சந்திக்க உள்ளார்.
மேலும் அவர் புதிய டெஸ்லா தொழிற்சாலையைத் திறக்கும் திட்டத்தைப் பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!" என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
சந்திப்புக்கான தேதி எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில், உலகம் முழுவதும் உள்ளவர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை வரவேற்பதாக பிரதமர் கூறியுள்ளார்.