இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை: கார்களின் ஆரம்ப விலை ரூ.20 லட்சம்
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது தொழிற்சாலையை நிறுவ மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் டெஸ்லாவை இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதோடு, அவற்றை மலிவு விலையில் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வெளியான தகவல்களின்படி, டெஸ்லா ஆண்டுதோறும் 5,00,000 எலட்ரிக் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் அந்த கார்களின் ஆரம்ப விலை ரூ.20 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சாத்தியமானால், இந்தியாவில் வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன சந்தையின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும்.
இந்தியாவிலிருந்து டெஸ்லா கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
கடந்த மே மாதத்தில், டெஸ்லா இந்தியாவில் ஒரு தொழிற்சாலையை உருவாக்குவதற்கான தனது ஆர்வத்தை முதன்முறையாக வெளிப்படுத்தியது. பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோதும், எலான் மஸ்க் இதுகுறித்து விவாதித்ததாக தெரிகிறது. மேலும், சீனாவில் செயல்படுவதைப் போலவே, இந்திய தொழிற்சாலையில் இருந்தும் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. ஆட்டோமொபைல் வல்லுனர்கள் இது குறித்து கூறுகையில், டெஸ்லா போன்ற நிறுவனம் இந்தியாவில் தனது தொழிற்சாலையை நிறுவுவது நிறுவனத்திற்கும், இந்தியாவிற்கும் பரஸ்பர நன்மை பயக்கும் என கூறுகின்றனர். டெஸ்லாவைப் பொறுத்தவரை, இது உலகின் மிக வேகமாக வளரும் எலக்ட்ரிக் வாகன சந்தைக்கான அணுகலை வழங்கும். அதே நேரத்தில், இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஒரு உலகளாவிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மையமாக நாட்டை நிலைநிறுத்துவதற்கான மற்றொரு படியாக அமையும்.