28 நாட்கள் இல்லை, இனி மாதம் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்: TRAI போட்ட புது விதி
செய்தி முன்னோட்டம்
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI), தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (13-வது திருத்தம்) விதிகள் 2026-ஐ வெளியிட்டுள்ளது. இப்புதிய திருத்தத்தின்படி, மொபைல் சேவை நிறுவனங்கள் கட்டாயமாக 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களால் வாடிக்கையாளர்கள் ஒரு ஆண்டிற்கு 13 முறை ரீசார்ஜ் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தனர். தற்போதைய புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் இனி மாதத்தின் குறிப்பிட்ட நாளில் ரீசார்ஜ் செய்தால், அடுத்த மாதத்தின் அதே நாளில் தான் ரீசார்ஜ் புதுப்பிக்கப்படும் (31 நாட்கள் கொண்ட மாதங்கள் உட்பட). குறிப்பிட்ட நாளில் (உதாரணத்திற்கு பிப்ரவரி) அந்த தேதி இல்லை எனில், அந்த மாதத்தின் கடைசி நாளில் ரீசார்ஜ் புதுப்பிக்கப்படும்.
ரீசார்ஜ்
குறைந்த கட்டணத்தில் 'வாய்ஸ் & எஸ்.எம்.எஸ்' திட்டங்கள்
2024-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 12-வது திருத்தத்திற்குப் பிறகு, தரவு பயன்படுத்தாத எளிய மற்றும் குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்கள் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களைப் பெற முடியாமல் தவித்து வந்தனர்.
இதைச் சரிசெய்யும் வகையில், தரவு பயன்பாடு இல்லாத, வெறும் குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி (SMS) வசதி மட்டுமே கொண்ட 'சிறப்புச் சலுகை வவுச்சர்களை' (STVs) 30 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான வேலிடிட்டியில் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்றும் TRAI அறிவுறுத்தியுள்ளது.
இப்புதிய 30 நாள் ரீசார்ஜ் விதிகள் எளிய மற்றும் குறைந்த பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என ராஜ்யசபா எம்பி ராகவ் சதா உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.