வரி செலுத்தியதில் முறைகேடு; டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலருக்கும் வருமான வரித்துறையிடமிருந்து வரிக் குறைப்புக் கோரிக்கைகளில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ₹50,000 முதல் ₹1.5 லட்சம் வரையிலான இந்த வரி கோரிக்கைத் தொகையைச் செலுத்துவதற்கு முன், ஊழியர்களை தங்களுடைய அறிவிப்பு வரும் வரை காத்திருக்குமாறு நிறுவனம் கேட்டுக் கொண்டதாகத் தகவல் ஆதாரங்களை மேற்கோள்காட்டி மணிகண்ட்ரோலில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, இது நிறுவனத்தில் நிகழ்ந்த தவறா அல்லது வரி அதிகாரிகள் தரப்பில் நிகழ்ந்த தவறா என நிறுவனம் சார்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், அதுவரை ஊழியர்களை அமைதிகாக்குமாறும் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய டிசிஎஸ்
இந்த சர்ச்சைக்கு மத்தியில், "அறிவிப்பைப் பெற்ற ஊழியர்கள் சரியான நேரத்தில் சரிசெய்தல் அறிவிப்பைப் பெறுவார்கள். மேலும் எந்த வரி கோரிக்கைத் தொகையையும் செலுத்தத் தேவையில்லை. வரி அதிகாரிகள் சரிசெய்தல் அறிவிப்புகளை அனுப்பியதும், முரண்பாடுகள் தீர்க்கப்படும்." என்று டிசிஎஸ் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறியது. தாக்கல் செய்யப்பட்ட ரிட்டன்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் தவறு செய்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக ஆதாரங்கள் கூறுவதாகவும் அறிக்கை கூறுகிறது. அறிவிப்பில் திருத்தம் செய்ய மதிப்பீட்டு அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. மின்னஞ்சலில், வரி அதிகாரிகள் வருமானத்தை மீண்டும் செயலாக்குவார்கள் என்று நிறுவனம் கூறியது. அதன் பிறகு டிடிஎஸ் துறையால் வழங்கப்பட்ட படிவம் 26ஏஎஸ் மற்றும் டிசிஎஸ் படிவம் 16 ஏ ஆகியவற்றுடன் இவை சரி செய்யப்படும் என்று அறிக்கை குறிப்பிட்டது.