Loading...
நோயல் டாடாவின் எதிர்ப்பை நிராகரித்த டாடா சன்ஸ்! சந்திரசேகரன் நியமனம் செல்லும் என அறிவிப்பு
நோயல் டாடாவின் எதிர்ப்பை நிராகரித்தது டாடா சன்ஸ்

நோயல் டாடாவின் எதிர்ப்பை நிராகரித்த டாடா சன்ஸ்! சந்திரசேகரன் நியமனம் செல்லும் என அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 25, 2026
02:23 pm

செய்தி முன்னோட்டம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டதற்கு, டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நோயல் டாடாவிற்கு செப்டம்பர் 24 அன்று கடிதம் எழுதியுள்ள டாடா சன்ஸ், "நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டே சந்திரசேகரனின் மறுநியமனம் சட்டப்பூர்வமாக செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தவித விதிமீறலும் இல்லை." என திட்டவட்டமாகத் தெரிவித்து அவரது எதிர்ப்பை நிராகரித்துள்ளது.

ஆதாரம்

சட்ட நிபுணர்களின் கருத்துகளை ஆதாரமாக சுட்டிக்காட்டிய டாடா சன்ஸ்

தனது முடிவை நியாயப்படுத்தும் வகையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களின் 3 சட்டப்பூர்வ ஆலோசனைக் கடிதங்களை டாடா சன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீதப் பங்குகளை வைத்திருக்கும் டாடா அறக்கட்டளை நியமிக்கும் இயக்குநர்களின் பெரும்பான்மை ஆதரவு இன்றி இந்த நியமனத்தை செல்லாது என நோயல் டாடா வாதிடுகிறார்.

ஆனால், நிறுவனத்தின் விதிமுறைகளின்படி இயக்குநர் குழு எடுத்த இந்த முடிவு முற்றிலும் செல்லுபடியாகும் என டாடா சன்ஸ் பதிலளித்துள்ளது.

இயக்குநர்களிடையே பிளவு

டாடா அறக்கட்டளை இயக்குநர்களிடையே பிளவு மற்றும் புதுப் பரிமாணம்

இந்த விவகாரத்தில் டாடா அறக்கட்டளை சார்பில் இயக்குநர் குழுவில் உள்ள பிரதிநிதிகளுக்கு இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

நோயல் டாடா, சந்திரசேகரனின் தொடர்ச்சியை எதிர்த்த நிலையில், மற்றொரு அறக்கட்டளை பிரதிநிதியான வேணு சீனிவாசன் சந்திரசேகரனின் நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டுப் பங்குகளை வைத்துள்ள அமைப்பின் தலைவரே நிறுவனத்தின் முடிவை எதிர்ப்பதும், அதை நிறுவனத்தின் இயக்குநர் குழு சட்டப்பூர்வமானது என மறுப்பதும் டாடா குழுமத்தின் வரலாற்றில் இல்லாத ஒரு புதிய கார்ப்பரேட் சிக்கலை உருவாக்கியுள்ளது.

ADVERTISEMENT

ஐபிஓ வெளியீடு

பங்குச்சந்தை வெளியீடு (ஐபிஓ) மற்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள்

இந்த மோதல் வெறும் தலைவர் நியமனத்தோடு நின்றுவிடாமல், டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடும் (ஐபிஓ) திட்டத்திலும் எதிரொலிக்கிறது.

டாடா சன்ஸ் பொதுப் பட்டியலுக்கு கொண்டுவரப்படுவதை நோயல் டாடா எதிர்த்து வருகிறார்.

அதேவேளையில், வங்கிசாரா நிதி நிறுவனம் என்ற நிலையில் இருந்து விலக டாடா சன்ஸ் சமர்ப்பித்த விண்ணப்பத்தை இந்திய ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது.

இதனால் உள்நாட்டு மோதல்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு இடையே டாடா குழுமம் ஒரு மாபெரும் சட்டப் போராட்டத்தை சந்தித்து வருகிறது.

ADVERTISEMENT