ஆப்பிளின் இலக்கை எட்ட ஓசூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் டாடா எலெக்ட்ரானிக்ஸ்
செய்தி முன்னோட்டம்
டாடா குழுமத்தின் அங்கமான டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஓசூரில் செயல்பட்டு வரும் தங்களது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையிலேயே ஆப்பிளின் ஐபோனுக்கான கேஸிங்குகள் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ரூ.5,000 கோடி முதலீட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, 15,000 பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் ஓசூர் தொழிற்சாலையின் அளவை 1.5 முதல் 2 மடங்கு வரை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம்.
சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள விஸ்ட்ரானின் ஐபோன் அசெம்பிளி தொழிற்சாலையை இந்நிறுவனம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இந்த விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அந்நிறுவனம்.
டாடா
ஓசூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் டாடா எலெக்ட்ரானிக்ஸ்:
தற்போது கிடைத்த தகவல்களின் படி, அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் அத்தொழிற்சாலையின் பணியாளர்களின் அளவை 15,000ல் இருந்து 28,000 ஆக அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்,
மேலும், விரிவாக்கத்தைத் தொடர்ந்து ஐபோனுக்கான பாகங்களை முதன்மையாகவும், பிற உயர்தர ஸ்மார்ட்போன்களுக்கான பாகங்களை இரண்டாம் பட்சமாகவும் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஐபோன்கள் அளவை உயர்த்த ஆப்பிள் இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும், அதனை ஈடுசெய்யவே ஓசூர் தொழிற்சாலையின் விரிவாக்கப் பணிகளை டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவிலிருந்து 49% ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்து சாம்சங்கை ஆப்பிள் பின்தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.