மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய ஸ்விக்கி, சோமாட்டோ திட்டம்
உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி, பிக்பாஸ்கெட் மற்றும் சோமாட்டோ ஆகியவை விரைவில் பீர், ஒயின் போன்ற மிதமான மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. புது டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த முயற்சிக்கான முன்னோடி திட்டங்களை பரிசீலித்து வருகின்றன. மது விநியோகத்தை அனுமதிப்பதன் சாதக பாதகங்களை அதிகாரிகள் தற்போது மதிப்பீடு செய்து வருவதாக தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 ஊரடங்கின் போது, ஸ்விக்கி, சோமாட்டோவின் முக்கிய வணிகம் கணிசமாகப் பாதிக்கப்பட்டபோது, அந்த நிறுவனங்கள் மெட்ரோ அல்லாத பகுதிகளில் தங்கள் சேவைகளைப் பன்முகப்படுத்த ஆன்லைன் மதுபான விநியோகத்தைத் தொடங்கியது.
மதுபான விநியோகத்தால் விற்பனை 20-30% அதிகரிப்பு
ஜார்க்கண்ட் அரசாங்கத்திடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகு, ஸ்விக்கி தனது மதுபான விநியோக சேவையை ராஞ்சியில் தொடங்கியது. சோமாட்டோ இதைப் பின்பற்றி, ராஞ்சியில் தனது மதுபான சேவையை தொடங்கியது. மேலும், ஜார்கண்டில் உள்ள மற்ற ஏழு நகரங்களிலும் மதுபான விநியோகத்தை விரிவுபடுத்த சோமாட்டோ திட்டமிட்டுள்ளது. அந்த நேரத்தில், இரு நிறுவனங்களும் தங்கள் சேவைகளை நீட்டிக்க முக்கிய பெருநகரங்களில் உள்ள அதிகாரிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தின. தற்போது வரை ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டுமே மதுபானங்களை வீடுகளுக்கு டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் ஆன்லைன் டெலிவரிகளின் விற்பனை 20-30% அதிகரித்தது.