வோடஃபோன் ஐடியாவுக்கு நிம்மதி; AGR நிலுவைத் தொகையைக் குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி
செய்தி முன்னோட்டம்
வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும் வகையில், அந்நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) நிலுவைத் தொகையின் ஒரு பகுதியைக் குறைப்பது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய திங்கட்கிழமை (அக்டோபர் 27) உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. குறிப்பாக, புதிதாகக் கோரப்பட்ட ₹9,450 கோடி நிலுவைத் தொகையை மறுபரிசீலனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மத்திய அரசின் கொள்கை எல்லைக்குள் வருவதாகவும், அரசு இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்வதில் எந்தத் தடையையும் காணவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. முன்னதாக, தொலைத்தொடர்புத் துறை புதிதாகக் கோரிய AGR நிலுவைத் தொகையை எதிர்த்து வோடஃபோன் ஐடியா நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
மனு விபரம்
வோடபோன் ஐடியா மனு விபரம்
அந்த மனுவில், நிலுவைத் தொகையின் கணிசமான பகுதி ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின் மூலம் தீர்க்கப்பட்ட 2017க்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது என்று வாதிடப்பட்டது. AGR என்பது, உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்களை அரசாங்கத்திற்குக் கணக்கிட்டு செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் வருவாய் வரையறை குறித்த நீண்டகாலக் கட்டணப் பகிர்வுப் பிரச்சினையைக் குறிக்கிறது. இந்த வழக்கில் சூழ்நிலைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். குறிப்பாக, வோஃடபோன் ஐடியாவில் அரசாங்கம் சமீபத்தில் மூலதனத்தை முதலீடு செய்ததைக் குறிப்பிட்டார். மேலும், 20 கோடி நுகர்வோருக்குச் சேவை செய்யும் இந்த நிறுவனத்தின் தலைவிதி நுகர்வோரின் நலனுடன் பிணைந்துள்ளது என்பதால், இது பரந்த பொது நலனைச் சார்ந்தது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆய்வு
உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யத் தயார்
அரசின் கொள்கை சார்ந்த இந்த விஷயத்தை ஆராயத் தயாராக இருப்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மத்திய அரசாங்கத்தை அவ்வாறு செய்வதில் இருந்து தடுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது. இந்தத் தீர்ப்பு, AGR இன் பரந்த வரையறையை மத்திய அரசுக்குச் சாதகமாக அங்கீகரித்த 2019 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் விதிக்கப்பட்ட மிகப்பெரிய நிதிச் சுமையின் கீழ் போராடி வரும் வோடஃபோன் ஐடியா நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான நம்பிக்கையை அளிக்கிறது.