'ஒரு நாளைக்கு ₹10-12 செலவு செய்வது பெரிய விஷயமல்ல'; மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த ஏர்டெல் தலைவர் ஆதரவு
செய்தி முன்னோட்டம்
பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பேட்டியளித்த ஏர்டெல் தலைவர் சுனில் பார்தி மிட்டல், இந்தியாவில் மொபைல் கட்டணங்களை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ₹300 ஆக இருக்க வேண்டும் எனக் கூறிய நிலையில், பணவீக்கம் காரணமாக தற்போது ஒரு பயனருக்கான சராசரி மாத வருவாய் ₹350 ஆக உயர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும் கட்டண உயர்வு எப்போது அமல்படுத்தப்படும் என்பதற்கான காலக்கெடுவை அவர் வெளியிடவில்லை.
ஒரு நாளுக்கான செலவு
ஒரு நாளைக்கு ₹10 முதல் ₹12 செலவு மிகவும் கட்டுப்படியாகக்கூடியது
மாதம் ₹350 என்ற சராசரி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டாலும், உலகிலேயே மிகக் குறைந்த கட்டணம் கொண்ட நாடாக இந்தியாவே தொடர்ந்து இருக்கும் என மிட்டல் வாதிட்டார்.
ஆரம்ப நிலைத் திட்டங்கள் ₹200-க்கும் அதிகமாகவும், உயர் திட்டங்கள் ₹500 முதல் ₹1,000 வரையிலும் இருக்கும் வகையில் இது அமையும்.
ஒரு சோப்பு, சிப்ஸ் பாக்கெட் அல்லது குளிர்பானம் வாங்குவதை விடக் குறைவாக, நாளொன்றுக்கு ₹10-12 செலவில் யுபிஐ, வங்கி, கல்வி மற்றும் பொழுதுபோக்கு சேவைகளை பெற முடியும் என்றார்.
5ஜி முதலீடுகள்
5ஜி முதலீடுகளும் செல்போன் கோபுரங்களை இரட்டிப்பாக்க வேண்டிய தேவையும்
மின்சாரம், எரிபொருள் மற்றும் நிர்வாக செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்தப் பெரும் முதலீடுகள் தேவைப்படுவதாக மிட்டல் சுட்டிக்காட்டினார்.
சீனாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்கள் உள்ள நிலையில், இந்தியாவில் உள்ள 3.5 லட்சம் கோபுரங்களைக் குறைந்தபட்சம் இரட்டிப்பாக்க வேண்டியுள்ளது.
மேலும் 5ஜி அலைக்கற்றை மற்றும் கட்டமைப்பிற்காக பல லட்சம் கோடிகள் செலவிடப்பட்ட போதிலும், அதற்கேற்ற புதிய வருவாய் இன்னும் கிடைக்கவில்லை என அவர் வருத்தம் தெரிவித்தார்.
சவால்கள்
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் மற்றும் வாடிக்கையாளர் இழப்பு சவால்கள்
செப்டம்பர் காலாண்டில் ஏர்டெல்லின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் ₹271 ஆக இருந்த நிலையில், ₹350 என்பது 29 சதவீத உயர்வாகும்.
கடைசியாக 2024 ஜூன் மாதம் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போது ஜியோ நிறுவனம் 1.27 கோடி வாடிக்கையாளர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர் சேர்க்கை குறைந்ததால் ₹299 திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ பங்குச் சந்தை பட்டியலிடலைத் தொடர்ந்து 2026 இறுதியில் கட்டண உயர்வு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.