புதிய முதலீட்டு நிறுவனத்தைத் துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸின் மகன் ரீடு ஜாப்ஸ்
மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் துணை-நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸின் மகன் ரீடு ஜாப்ஸ், புதிய துணிகர முதலீட்டு நிறுவனம் ஒன்றைத் துவக்கியிருக்கிறார். யோஸ்மைட் VC என்ற புதிய துணிகர முதலீட்டு நிறுவனத்தை துவக்கியிருக்கும் ரீடு ஜாப்ஸ், ஏற்கனவே அந்நிறுவனத்திற்கு 200 மில்லியன் டாலர் முதலீட்டையும் திரட்டியிருக்கிறார். இந்த முதலீட்டு நிறுவனத்தின் மூலம் திரட்டப்படும் முதலீட்டை, புதிய புற்றுநோய் சிகிச்சை முறைகளைக் கண்டறிவதற்கு செலவிடவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். 31 வயதான ரீடு, முன்னர் தனது தாயும், ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவியுமான லாரன் போவெல் ஜாப்ஸின் சேவை நிறுவனமான எமர்ஸன் கலெக்டிவ் நிறுவனத்தின் மருத்துவப் பிரிவை கவனித்து வந்திருக்கிறார். தற்போது அதிலிருந்து விலகி தன்னுடைய சொந்த முதலீட்டு நிறுவனத்தைத் துவக்கியிருக்கிறார் ரீடு.
ரீடு ஜாப்ஸின் புதிய நிறுவனம்:
ரீடு ஜாப்ஸூக்கு 12 வயது இருக்கும் போது, ஸ்டீவ் ஜாப்ஸூக்கு கணையப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. 2011-ம் ஆண்டு அதன் காரணமாகவே உயிரிழந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். தனது தந்தையின் உயிரிழப்பால் மிகவும் மனமுடைந்த ரீடு ஜாப்ஸ், சிறிது காலம் தனது மருத்துவப் படிப்பிலிருந்து மாறி, வரலாற்றையும் எடுத்துப் படித்திருக்கிறார். அதன் பின்பு மீண்ட ரீடு ஜாப்ஸ், புற்றுநோயியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். தற்போது புற்றுநோய்க்கான புதிய சிகிச்சைகளைக் கண்டறிய யோஸ்மைட் என்ற புதிய நிறுவனத்தைத் துவக்கியிருக்கிறார். தனது பெற்றோர் திருமணம் செய்து கொண்ட இடத்தின் பெயரையே தன்னுடைய புதிய நிறுவனத்திற்கும் சூட்டியிருக்கிறார் ரீடு. இவருடைய நிறுவனத்தில் ஜான் டூயர் உள்ளிட்ட பலரும் தற்போது முதலீடு செய்திருக்கிறார்கள்.