கலாநிதி மாறனிடம் இருந்து ரூ.450 கோடி பணத்தைத் திரும்பக் கோரியுள்ளது ஸ்பைஸ்ஜெட்
பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அதன் முன்னாள் விளம்பரதாரர் கலாநிதி மாறன் மற்றும் அவரது நிறுவனமான கேஏஎல் ஏர்வேஸிடம் இருந்து ரூ.450 கோடியை திரும்பப்பெறும் என்று அந்த நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. மே 17ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, கலாநிதி மாறனுக்கு ஆதரவாக நீதிமன்றம் இதற்கு முன்பு வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. கேஏஎல் ஏர்வேஸ் மற்றும் கலாநிதி மாறனுக்கு ஸ்பைஸ்ஜெட் செலுத்திய ரூ.730 கோடியில் ரூ.450 கோடியை திருப்பித் தர வேண்டும் என்று ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. இதில் அசல் ரூ.580 கோடியும், வட்டியாக ரூ.150 கோடியும் அடங்கும்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு
"முன்னாள் விளம்பரதாரர் கலாநிதி மாறன் மற்றும் அவரது நிறுவனமான கேஏஎல் ஏர்வேஸ் மீதான நீண்டகால பங்கு பரிமாற்ற வழக்கில் ஸ்பைஸ்ஜெட் மற்றும் அதன் விளம்பரதாரர் அஜய் சிங் ஆகியோருக்கு ஆதரவாக டெல்லி உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் மே 17 அன்று தீர்ப்பளித்தது" என்று ஸ்பைஸ்ஜெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு ஒற்றை நீதிபதி பெஞ்சின் முந்தைய முடிவை ரத்து செய்துள்ளது. எனவே, சட்ட ஆலோசனையின் அடிப்படையில் கணிசமான பணத்தை கலாநிதி மாறனிடம் இருந்து திரும்பப்பெற ஸ்பைஸ்ஜெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.