சென்செக்ஸ் 1109 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு
புதன்கிழமை, மார்ச் 13, 2024 அன்று பங்குச் சந்தை கடுமையாக சரிந்ததால், முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்தித்தனர். இன்று பிற்பகல் சென்செக்ஸ் 1109 புள்ளிகள் சரிந்து 72,558 ஆக இருந்தது. இந்த குறிப்பிடத்தக்க சரிவு மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களை கடுமையாக தாக்கியது. பங்கு சந்தையின் சரிவு காரணமாக நிஃப்டியும் பாதிக்கப்பட்டது. 422 புள்ளிகள் சரிந்த நிஃப்டி, இன்று பங்கு சந்தையின் முடிவில் 21,913 ஆக இருந்தது. இதனால், நிஃப்டி நேற்றைய லாபங்களை இழந்ததுடன், முதலீட்டாளர்களிடையே நிலவும் அவநம்பிக்கையை மேலும் அதிகரித்தது.
89 பங்குகள் மட்டுமே 52 வார உச்சத்தை எட்டியது
14 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்தித்தனர். முந்தைய அமர்வின் சொத்து மதிப்பான ரூ.385.64 லட்சம் கோடியிலிருந்து மொத்த முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.371.69 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. பவர்கிரிட், என்டிபிசி, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், டைட்டன் மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகளால் தான் சென்செக்ஸில் பெரும் இழப்பு ஏற்பட்டது. மொத்தத்தில் 223 பங்குகள் கடுமையாக சரிந்து, கடந்த 52 வாரம் இல்லாத சரிவை சந்தித்துள்ளது. பிஎஸ்இயில் இருக்கும் 89 பங்குகள் மட்டுமே 52 வார உச்சத்தை எட்டியது. 3,926 பங்குகளில் 351 பங்குகள் மட்டுமே பச்சை நிறத்தில் வர்த்தகமாகியது. 3,526 பங்குகளில் பெரும்பாலானவை சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன. 66 பங்குகள் மாற்றமே இல்லாமல் இருந்தன.