பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதை அடுத்து, உச்சத்தை எட்டியது பங்குச் சந்தை
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனதை அடுத்து, பெஞ்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று சாதனை உச்சத்தை எட்டின. சென்செக்ஸ் முதன்முறையாக 77,000 புள்ளிகளைத் தாண்டியது. அதே நேரத்தில் நிஃப்டி 50 புதிய உச்சத்தை எட்டியது. ஆனால், இரு குறியீடுகளும் அவற்றின் ஆரம்ப போக்குகளில் இருந்து பின்வாங்கி இருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது. இன்று காலை 10:09 நிலவரப்படி, எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் 67.22 புள்ளிகள் குறைந்து 76,626.14 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50, 1.35 புள்ளிகள் அதிகரித்து 23,291.50 ஆகவும் இருந்தது. ஆரம்பத்தில் உயர்வு இருந்தபோதிலும், எதிர்காலத்தில் சாத்தியமான பொருளாதார சவால்கள் ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக நிதி ஒழுக்கத்தை பராமரிப்பதில் சவால்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
ஜூன் 4ஆம் தேதி ரூ.21,179 கோடிக்கு பங்குகளை வாங்கிய சில்லறை முதலீட்டாளர்கள்
"கடந்த வார ரோலர் கோஸ்டர் பயணத்திற்குப் பிறகு, சந்தைக்கு விரைவில் மூச்சுத் திணற வாய்ப்புள்ளது. இந்த காளை சந்தையின் முக்கிய உந்து சக்தியாக உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள்(HNIகள்) உள்ளிட்ட இந்திய சில்லறை முதலீட்டாளர்கள் உள்ளனர்." என்று ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் டாக்டர். வி.கே.விஜயகுமார் கூறியுள்ளார். நிஃப்டி 5.9% சரிந்த ஜூன் 4ஆம் தேதி அன்று, சில்லறை முதலீட்டாளர்கள் 21,179 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியது அவர்களின் வாங்கும் சக்தியையும் நம்பிக்கையையும் காட்டுகிறது. இது நீண்டகால கட்டமைப்புப் போக்கைக் குறிக்கிறது." என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.