ஜிடிபி சாதனை படைத்தும் பங்குச்சந்தை 3,300 புள்ளிகள் வீழ்ந்தது ஏன்? முதலீட்டாளர்களை அதிரவைத்த 3 முக்கிய காரணங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்திய புள்ளியியல் துறை 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டு ஜிடிபி தரவுகளை வெளியிட்டது. அதன்படி, இந்திய பொருளாதாரம் அபாரமான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த போதிலும், இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்ந்து கடுமையான விற்பனை அழுத்தத்திற்கு உள்ளாகி வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் 76,957 புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் தற்போது 3,300 புள்ளிகள் வரை சரிந்து 73,675 ஆகக் குறைந்துள்ளது. அதேபோன்று தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 1,000 புள்ளிகள் வரை குறைந்து 23,075 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்கா
அமெரிக்கப் பத்திர சந்தையின் உயர்வும் அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேற்றமும்
இந்திய ஜிடிபி உயர்வைக் கண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் உலகளாவிய நிதிச் சூழல்கள் அதற்கு பாதகமாக அமைந்தன.
அமெரிக்கப் பத்திரங்களின் வட்டி விகிதங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனால் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் அமெரிக்க சந்தையை நோக்கி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சென்றுவிட்டனர்.
அவர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்த பங்குகளை அதிகளவில் விற்று வெளியேறியதால், சந்தையில் பணப்புழக்கம் குறைந்து சரிவு ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை உயர்வும் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் வீழ்ச்சியும்
மத்திய கிழக்கில் எழுந்துள்ள போர் பதற்றங்கள் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்வதால், எண்ணெய் விலை உயர்வு நாட்டின் செலவை அதிகரிப்பதுடன் இந்திய ரூபாயின் மதிப்பிலும் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதனால் உற்பத்தி மற்றும் வாகனத் துறை நிறுவனங்களின் மூலப்பொருள் செலவுகள் அதிகரித்து, நிறுவனங்களின் காலாண்டு லாபம் குறையும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
அதிக விலை
பங்குகளின் அதிகப்படியான விலையும் உள்நாட்டுத் துறைசார்ந்த அழுத்தங்களும்
இந்திய பங்குச்சந்தையில் முன்னணி நிறுவனங்களின் பங்குகளின் விலை ஏற்கனவே மிக அதிகமாக இருந்ததால், முதலீட்டாளர்கள் தங்களின் லாபத்தை வெளியேடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், வெளிநாடுகளின் தகவல் தொழில்நுட்ப செலவினக் குறைப்பால் ஐடி துறையும், வட்டி விகித அழுத்தங்களால் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் சவால்களை சந்தித்து வருகின்றன.
இந்த உலகளாவிய மற்றும் உள்நாட்டுக் காரணிகளே ஜிடிபி சாதனைக்குப் பிறகும் பங்குச்சந்தை கடும் சரிவை சந்திக்க முதன்மை ஆதாரமாக அமைந்துள்ளன.