வாரத்தின் முதல் நாளிலேயே கிடுகிடு வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
வாரத்தின் முதல்நாளான திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5), இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் ஆரம்பித்துள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திங்கட்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் காலை 10 மணியளவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முறையே 3% மற்றும் 2% சரிந்தன. இதன்படி, சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் குறைந்து 79,482 ஆக இருந்தது. அதே நேரத்தில் நிஃப்டி 24,300 க்கு கீழே வர்த்தகம் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 1 அன்று நிஃப்டி 25,000க்கு மேல் சென்று புதிய சாதனையைத் தொட்ட சில நாட்களுக்குப் பிறகு, தற்போது தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த சரிவுகள் மூலம், வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு ₹10 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் தொடங்கியதற்கான பின்னணி
அமெரிக்க மந்தநிலை அச்சம் மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பதட்டங்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தையை பாதித்துள்ளன. அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளில் அதிகபட்சமாக 4.3% ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்ந்து நான்காவது மாதமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு மூலோபாயவாதியான வி.கே.விஜயகுமார் கருத்துப்படி, இந்தத் தரவு உலகளாவிய முதலீட்டாளர்களிடையே கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கூடுதலாக, ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால், சந்தை இந்த வாரம் முழுவதுமே ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.