இந்தியாவின் சிப் புரட்சி! செமிகான் 2.0 வழிகாட்டுதல்கள் அறிவிப்பு; செமிகண்டக்டர் துறைக்கு ரூ.4 லட்சம் கோடி இலக்கு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவை உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், செமிகான் 2.0 திட்டத்திற்கான விரிவான கட்டமைப்பை மத்திய அரசு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) முறைப்படி அறிவித்துள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, சிப் வடிவமைப்பு, உற்பத்தி, மேம்பட்ட பேக்கேஜிங், உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள், ஆராய்ச்சி மற்றும் திறன்பயிற்சி ஆகிய ஆறு முதன்மைத் தூண்களின் கீழ் நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளன.
நிதி உதவி
பல்வேறு பிரிவுகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி உதவி
புதிய வழிகாட்டுதல்களின்படி, சிலிகான் செமிகண்டக்டர் வேஃபர் உற்பத்தி மையங்களுக்கு 40 சதவீத நிதியுதவியை அரசு வழங்கும்.
மேலும், 2.5D மற்றும் 3D பேக்கேஜிங், வேஃபர்-லெவல் சிப்-ஸ்கேல் பேக்கேஜிங் போன்ற அதிநவீன பேக்கேஜிங் தொழில்நுட்பங்களுக்கு தகுதியான மூலதன செலவில் 35 சதவீத நிதி உதவியும், வழக்கமான பழமையான பேக்கேஜிங் திட்டங்களுக்கு 25 சதவீத நிதி உதவியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சிறப்பு ஆதரவு
சிமோஸ் (CMOS) செயல்முறை தொழில்நுட்பங்கள், சிலிகான் ஃபோட்டானிக்ஸ், டிஸ்ப்ளே உற்பத்தி மற்றும் சிப்லெட் சார்ந்த பேக்கேஜிங் உள்ளிட்ட அதிநவீன செமிகண்டக்டர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கும் இத்திட்டம் முழு ஆதரவை வழங்கும்.
செமிகான் 2.0 திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பொதுவாக ஆறு ஆண்டுகள் வரை செயல்படும்.
அதே வேளையில் இதற்கான தொடக்க விண்ணப்ப சாளரம் மூன்று ஆண்டுகளுக்குத் திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலீடு
ரூ.4 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க இலக்கு
இந்திய செமிகண்டக்டர் இயக்கம் இத்திட்டத்தை செயல்படுத்தும் முதன்மை முகமையாக செயல்படும்.
ரூ.1,27,500 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் நாட்டில் ரூ.4 லட்சம் கோடி வரை முதலீடுகளை ஈர்க்கவும், ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தியைப் பெருக்கவும், ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதியை எட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் இந்தியாவில் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நாட்டின் மின்னணு உற்பத்தியைப் புதிய உயரத்திற்கு எடுத்து செல்லும்.