நோக்கியா எனும் சாம்ராஜ்யம்: வளர்ச்சியும், வீழ்ச்சியும்!
சில பாத்தாண்டுகளுக்கு முன்பு மொபைல் என்றால் அது நோக்கியா தான். எப்படி முன்பு கார் என்றால் அது அம்பாஸிடர் தான் என்ற மனநிலை இருந்ததோ, அப்படி மொபைல் என்றால் அது நோக்கியா தான் என்ற மனநிலையே இந்தியாவில் பெரும்பாலானோரிடம் இருந்தது. இந்தியா மட்டுமின்றி உலகளவில் முன்னணி மொபைல் நிறுவனமானகத் திகழ்ந்தது நோக்கியா. 2007ம் ஆண்டு உலக மொபைல் சந்தையின் 51% சந்தை பங்குகளைத் தன்வசம் வைத்திருந்தது நோக்கியா. ஆனால், இன்று மொபைல் உற்பத்தியையே விட்டுவிட்டு வேறு வணிகத்திற்கு மாறியிருக்கிறது அந்நிறுவனம். எங்கு சறுக்கியது நோக்கியா? எங்கு தொடங்கியது அந்நிறுவனத்தின் வீழ்ச்சி? உண்மையில் நோக்கியா வீழ்ச்சி தான் அடைந்ததா? முதலில் எங்கு தொடங்கிது நோக்கியாவின் பயணம்? விடை காணலாம்.
நோக்கியாவின் தொடக்கம்:
முதலில் நோக்கியா ஒரு மொபைல் தயாரிப்பு நிறுவனமே அல்ல. 1865ம் ஆண்டு ஒரு பேப்பர் மில் தொழிற்சாலையாக ஃபின்லாந்து நாட்டில் தொடங்கப்பட்டது நோக்கியா. முதன் தொழிற்சாலையை விரிவுபடுத்தி நோக்கியன்விர்தா என்ற நதிக்கரையில் அமைக்கப்பட்டது அந்நிறுவனம். அந்த இடத்தின் பெயரைத் தொடர்ந்தே அந்நிறுவனத்தின் பெயரும் நோக்கியா என அழைக்கப்படலாயிற்று. முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து நோக்கியா நிறுவனம் திவாலாகும் நிலையை நோக்கிச் செல்லவே, ஃபின்னிஷ் ரப்பர் வொர்க்ஸ் என்ற நிறுவனம் நோக்கியாவை வாங்கி, அதனைத் தங்களுடைய ஃபின்னிஷ் கேபிள் வொர்க்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டது.
முதல் திருப்புமுனை:
1967ம் ஆண்டு ஃபின்னிஷ் ரப்பர் வொர்க்ஸ், நோக்கியா AB மற்றும் Kaapelitehdas ஆகிய மூன்று நிறுவனங்களும் நோக்கியா கார்ப்பரேஷன் என்ற ஒரே குடையில் கீழ் இணைக்கப்பட்டன. இந்த ஒருங்கிணைந்த நிறுவனமானது ரப்பர், கேபிள், பாரஸ்ட்ரி மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என நான்கு பிரிவுகளின் கீழ் பல்வேறு தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தது. இந்த ஒருங்கிணைந்த நிறுவனத்தின் உருவாக்கத்திற்குப் பின்பு தான், தொலைத்தொடர்புத்துறையிலும் கால் பதித்தது நோக்கியா. 1966ம் ஆண்டு சலோரா என்ற நிறுவனத்துடன் இணைந்து ரேடியோ கார் டெலிபோன்களை உருவாக்கிய நோக்கியா, 1971ம் ஆண்டு அதனை ஃபினாலாந்தில் வணிக ரீதியாகவும் விற்பனை செய்யத் தொடங்கியது.
புதிய நிறுவனங்களின் இணைப்பு:
1984ம் ஆண்டு சலோரா என்ற தொலைக்காட்சி நிறுவனம், 1985ம் ஆண்டு லக்சர் AB என்ற மின்னணு மற்றும் கணினி தயாரிப்பு நிறுனம் மற்றும் 1987ம் ஆண்டு ஓசானிக் என்ற பிரெஞ்சு தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றை தன்வசப்படுத்தியது நோக்கியா. இதற்கிடையில் மொபைரா (Mobira) மொபைல் தயாரிப்பு நிறுவனத்தையும் வாங்கியது நோக்கியா. இது தான் அந்நிறுவனத்தின வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. 1982ம் ஆண்டு மொபைரா செனேட்டர் என்ற முதல் மொபைல் போனை வெளியிட்டது நோக்கியா. ஆனால், இது எல்லாம் சொல்லிவைத்தபடி சரியாக நடைபெறவில்லை அந்நிறுவனத்திற்கு. 1992ம் ஆண்டிற்குள் ஃபின்னஷ் ரப்பர் வொர்க்ஸ் மற்றும் நோக்கியா டேட்டா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை விற்பனை செய்யும் நிலைக்கு ஆளானது நோக்கியா.
புதிய சிஇஓ, புதிய முயற்சி:
1992ம் ஆண்டு ஜோர்மா ஒலில்லா என்பவர் நோக்கியாவின் புதிய சிஇஓவாக பதவியில் அமர்ந்தார். அவர் எடுத்த மிக முக்கியமான முடிவுகளுள் ஒன்று நோக்கியாவின் மொபைல் பிரிவை விற்பனை செய்யக்கூடாது என்பது. அந்த ஆண்டு தான் நோக்கியா 1011 என்ற முதல் GSM மொபைலை வெளியிட்டது நோக்கியா. அந்த மொபைலைக் கொண்டு, உலகின் முதல் GSM அழைப்பை மேற்கொண்டார் ஃபின்லாந்து பிரதமர் ஹர்ரி ஹோல்கரி. அதுவரை ஃபின்லாந்திற்குள் மட்டுமே தெரிந்த நோக்கியாவின் பெயர், அதன் பின்பு காட்டுத்தீ போல உலகமெங்கும் பரவியது. 1998ம் ஆண்டு மோட்டோரோலாவையும் வாங்கி, உலகின் நம்பர் 1 மொபைல் நிறுவனமானது நோக்கியா. அதாவது தனது அரியாசனத்தில் ஏறி அமர்ந்தது.
வீழ்ச்சியின் தொடக்கம்:
அடுத்த பத்து ஆண்டுகளுக்கு உலகின் நம்பர் 1 மொபைல் நிறுவனமாகவே கோலோச்சியது நோக்கியா. இதுவரை உலகின் 50% மொபைல் சந்தையை தன்வசம் வைத்திருந்த முதல் மற்றும் ஒரே நிறுவனம் நோக்கியாதான். ஆனால், நோக்கியாவும் வீழத் தொடங்கியது 2007-க்குப் பிறகு. அந்த ஆண்டு தான் இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களுக்கான பிள்ளையார் சுழியைப் போட்டது ஆப்பிள். ஆம், முதல் ஆப்பிள் ஐபோன் வெளியானது அப்போது தான். அந்த ஆண்டு தொடங்கி அடுத்த ஐந்து ஆண்டுகளி திவாலாகும் நிலைக்குச் சென்றது நோக்கியா. உள்ளும் புறமும் பல்வேறு காரணிகளால் நோக்கிய வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
வீழ்ச்சிக்கான காரணம்:
ஆப்பிளின் ஐஓஎஸ் இயங்குதள ஸ்மார்ட்போன்களைத் தொடர்ந்து, ஆண்ட்ராய்டு இயங்குதளமும் மொபைல் சந்தையில் அறிமுகமானது. காலத்திற்கேற்ப தகவமைப்பதன் அவசியத்தை மறந்த நோக்கியாவின் தலைமை புதுமைக்குப் பதில், அளவிற்கு முக்கியத்துவம் அளித்து, பழைய மொபைல் தொழில்நுட்பத்தைக் கொண்டு அதிக அளவிலான மொபைல் போன்களைத் தயாரிக்கத் தொடங்கினர். ஆனால், அதன் பின் நோக்கியா சுதாரிப்பதற்குள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ், ஆப்பிள் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மொபைல் சந்தையை ஆட்கொண்டுவிட்டது. இவற்றுக்குப் போட்டியாக நோக்கிய அறிமுகப்படுத்திய சிம்பயான் இயங்குதளத்தால், போட்டியாளர்களுடன் தாக்குப் பிடிக்க முடியவில்லை. விண்டோஸ் இயங்குதளத்தை ஏற்றுக்கொண்ட நோக்கியா நிறுவனத்தின் மொபைல் பிரிவை மைக்ரோசாஃப்ட் நிறுவனமே வாங்கிக்கொண்டது.
புதிய தொடக்கம்:
மொபைல் பிரிவின் விற்பனைக்குப் பிறகு, நோக்கியா சைமென்ஸ் நெட்வொர்க்ஸ் மற்றும் அல்காடெல் லூசென்ட் உள்ளிட்ட நிறுவனங்களை கையகப்படுத்தி, தொலைதொடர்பு உபகரண நிறுவனங்களை வழங்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கியது நோக்கியா. அந்தத் தொடக்கத்தின் பலனாக, தற்போது உலகளவில் 5G தொழில்நுட்ப சேவை வழங்குவதற்கான தொலைத்தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கிறது நோக்கியா நிறுவனம். மொபைல் விற்பனையில் வீழ்ச்சியடைந்தாலும், வேறு ஒரு புதிய துறையில் இன்று முன்னணி நிறுவனமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது நோக்கியா. நோக்கியா மைக்ரோசாஃப்டிற்கு விற்பனை செய்த மொபைல் உற்பத்தி பிரிவு என்னவானது?
நோக்கியாவின் மொபைல் உற்பத்தி பிரிவு:
மைக்ரோசாஃப்டிடம் விற்பனை செய்த மொபைல் பிரிவை, நோக்கியாவின் முன்னாள் நிர்வாகிகளால் உருவாக்கப்பட்ட HMD குளோபல் என்ற ஃபின்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் வாங்கி மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியது. இந்த முறை, எதிர்நீச்சல் போடாமல் ஆற்றின் போக்கோடு சேர்ந்து பயணிக்கத் தொடங்கியது அந்நிறுவனம். ஆம், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட நோக்கியா மொபைல் போன்கள் வெளியாகத் தொடங்கின. 2017ம் ஆண்டு HMD குளோபலால் வெளியிடப்பட்ட நோக்கியா 3310 என்ற ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் விரும்ப, தொடர்ந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடத் தொடங்கியது அந்நிறுவனம். 2023ல் ஆண்டுக்கு 17.5 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையோடு, உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் 10வது இடத்தைப் பிடித்திருக்கிறது நோக்கியா (பிராண்டு).
நோக்கியா சொல்லும் சேதி:
ஃபின்லாந்தில் தொடங்கி உலகமெங்கும் பயணம் செய்த கதை நோக்கியாவுடையது. இடையில் பல இடங்களில் அதன் உரிமையாளர்கள் மாறியிருக்கிறார்கள், அதன் நோக்கம் மாறியிருக்கிறது, அதன் வணிகம் மாறியிருக்கிறது. முக்கியமாக எல்லா இடங்களிலும் ராஜாவாக நோக்கியா இல்லை. 1998 முதல் 2007 வரை மொபைல் விற்பனையில் கோலோச்சியதைத் தவிர பிற இடங்களில் நோக்கியா ஆதிக்கம் செலுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால், இன்றும் பல்வேறு தளங்களில் நிலைத்து நிற்கிறது அந்நிறுவனம். தன்னைத்தானே தகவமைத்துக் கொள்வதன் மூலம் வளர்ச்சியை சந்தித்த நோக்கியா, தகவமைத்துக் கொள்ளாததினாலேயே வீழ்ச்சியையும் சந்தித்தது. வீழ்ச்சி என்பது நோக்கியாவின் 155 கால வரலாற்றில் ஒரு பகுதி தானே தவிர, அதனையே முற்றிலுமாக நோக்கியாவின் கதையாக நாம் சொல்லிவிட முடியாது. நோக்கியாவின் கதை, அனைத்து நிறுவனங்களுக்குமான ஒரு பாடம்.