ரெப்போ வட்டி விகிதத்தில் ஒன்பதாவது முறையாக மாற்றமில்லை; ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) அதிக உணவுப் பணவீக்கம் இருப்பதாக கூறப்பட்டாலும், ஒன்பதாவது முறையாக ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாக தொடரும் என அறிவித்துள்ளது. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட எம்பிசி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) ஆர்பிஐயின் பணவியல் கொள்கை குறித்து விவாதத்தித்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு குழுவில் எடுக்கப்பட்ட முடிவை அறிவித்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், பணவீக்கம் பரவலாக குறைந்து வருவதாகத் தெரிவித்தார். முன்னதாக, கொரோனா தொற்றுநோய் தணிந்த பிறகு உயர் பணவீக்க அளவைச் சமாளிக்கும் பொருட்டு, ரிசர்வ் வங்கி 2022இல் ரெப்போ விகிதத்தை 250 புள்ளிகள் அதிகரித்து 6.50 சதவீதமாக உயர்த்திய நிலையில், தற்போதுவரை அது தொடர்கிறது.
ரெப்போ விகிதத்தை மாற்றாததன் தாக்கம்
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை தொடர்ந்து 6.5 சதவீதமாக நிலையாக வைத்துள்ளதால், ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து வெளிப்புற கடன் விகிதங்களும் (ஈபிஎல்ஆர்) அதிகரிக்காது. இதன்மூலம் வங்கிகளில் கடன்பெற்றவர்களின் இஎம்ஐ தொகை அதிகரிக்காது. இருப்பினும், மே 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையில் ரெப்போ விகிதத்தில் 2.5% உயர்வின் முழு பரிமாற்றம் நடக்காத நிலையில், கடன் வழங்குபவர்கள் நிதி அடிப்படையிலான கடன் விகிதத்துடன் (எம்சிஎல்ஆர்) இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தலாம். இதற்கிடையே 2024-25 நிதியாண்டுக்கான உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக இருக்க என்று ஆர்பிஐ கணித்துள்ளது. அதே நேரத்தில் நிதியாண்டிற்கான பணவீக்க கணிப்பு 4.5% என மதிப்பிடப்பட்டுள்ளது.