பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்க தடை: ரிசர்வ் வங்கி அதிரடி
'eCOM' மற்றும் 'இன்ஸ்டா EMI கார்டு' மூலம் கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 பிரிவு 45L(1)(b)இன் கீழ், 'eCOM' மற்றும் 'இன்ஸ்டா EMI கார்டு' மூலம் கடன் வழங்குதல் மற்றும் பண பரிமாற்றம் செய்தல் ஆகிவற்றை உடனடியாக நிறுத்துமாறு பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அரசு ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. டிஜிட்டல் கடன் வழங்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை பஜாஜ் ஃபைனான்ஸ் பின்பற்றாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி இந்த தடையை ரத்து செய்யுமா?
பொதுவாக, டிஜிட்டல் கடன்களை வழங்கும் போது, முக்கிய உண்மை அறிக்கைகளையும், இதற்கு முன் கடன் வழங்கும் போது ஏற்பட்ட குறைபாடுகளையும் நிதி நிறுவனங்கள் கடன் பெறுபவர்களிடம் வெளிப்படையாக சொல்ல வேண்டும். ஆனால், அந்த வழிகாட்டுதலுக்கு பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் இணங்கவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்கிய பிறகு, கடன் வழங்குவதற்கான தடையை ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செய்யும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. "சரி செய்யப்பட்ட குறைபாடுகள் ரிசர்வ் வங்கியை திருப்திப்படுத்தும் வகையில் இருந்தால், இது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்." என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.