மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ரத்தன் டாடாவின் பழைய காணொளி
ஒரு வணிக நிறுவனம் தொடங்கபட்டு வெற்றிகரமான நிறுவனமாக வளர்வதற்கு முன் பல்வேறு தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதில் சில தடைகள், நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் கூட காரணமாக அமையலாம். இன்று இந்தியாவின் பெருநிறுவனங்களுள் ஒன்றாக வளர்ந்திருக்கும் டாடா நிறுவனத்திற்கு தொடக்க காலத்தில் ஏற்பட்ட ஒரு தடையை குறித்து காணொளி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் ரத்தன் டாடா. 2013ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியான அந்தக் காணொளியானது தற்போது, சமூக வலைத்தளங்களில் மீண்டும் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் காணொளியில், கொள்ளைக் கும்பல் ஒன்றால் டாடா நிறுவனம் சந்தித்த பிரச்சினைகளைக் குறித்து, அதனை எப்படி எதிர்கொண்டனர் என்பதைக் குறித்து பேசியிருக்கிறார் ரத்தன் டாடா.
காணொளியில் ரத்தன் டாடா கூறியது என்ன?
1980-களில் டாடா ஒரு வளர்ந்து வரும் நிறுவனமாக இருந்தது. அப்போது டாடா நிறுவனத்தின் யூனியனில் இருக்கும் பணத்தை அபகரிக்க திட்டம் தீட்டிய கொள்ளைன் ஒருவன் தங்களுக்குப் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக அந்தக் காணொளியில் தெரிவித்திருக்கிறார் ரத்தன் டாடா. காவல்துறையும், அந்தக் கொள்ளையனின் கைகளிலேயே இருந்ததால், காவல்துறையிடமும் செல்ல முடியாத நிலை. தங்கள் நிறுவன நிர்வாகிகள் மீது வன்முறையை பிரயோகிப்பது முதல் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்துவது வரை அனைத்து விதமான பிரச்சினைகளையும் கொடுத்திருக்கிறது அந்தக் கொள்ளைக் கூட்டம். ஆனால், அந்தக் கூட்டத்திடம் அடிபணிந்து விடாமல் எதிர்த்து நின்று போராடியதன் பலனாக, இறுதியில் அந்தக் கொள்ளையன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். அந்தக் கொள்ளையன் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காணொளியில் தெரிவித்திருக்கிறார் ரத்தன் டாடா.