கார் கதவு லைட்டா திறந்து இருந்தா கிளைம் கிடையாதா? ஜாகுவார் காருக்கு இன்சூரன்ஸ் மறுத்த நிறுவனத்திற்கு அபராதம்
செய்தி முன்னோட்டம்
ஜாகுவார் கார் வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவர், கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் தனது காரின் ஓட்டுநர் பக்க கண்ணாடியை சிறிதளவு மூடாமல் தவறுதலாக விட்டுவிட்டார். இதனால் மழைநீர் உள்ளே புகுந்து காரின் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பிற முக்கிய பாகங்கள் பலத்த சேதமடைந்தன. காரை சரிசெய்ய ரூ.2.73 லட்சம் செலவான நிலையில், இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் ரூ.1.98 லட்சம் இழப்பீடாகக் கணக்கிட்டார். ஆனால், நிறுவனம் காப்பீட்டுத் தொகையை வழங்க முற்றிலும் மறுத்தது.
இன்சூரன்ஸ் மறுப்பு
வாடிக்கையாளரின் அலட்சியம் எனக் கூறி இன்சூரன்ஸ் நிறுவனம் மறுப்பு
"மழைநீரால் ஏற்படும் சேதங்களுக்கு காப்பீட்டுக் கொள்கையில் பாதுகாப்பு கிடையாது.
மேலும், காரின் கண்ணாடியைத் திறந்து வைத்தது வாடிக்கையாளரின் கவனக்குறைவு மற்றும் ஒப்பந்த விதிகளை மீறிய செயலாகும்." எனக் கூறி 2022 பிப்ரவரியில் இன்சூரன்ஸ் நிறுவனம் கிளைமை நிராகரித்தது.
இதனால் அதிருப்தியடைந்த கார் உரிமையாளர், பாலிசி எடுக்கும்போது தனக்கு முழுமையான விதிமுறைகள் மற்றும் விலக்குகள் அடங்கிய ஆவணங்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி சத்தீஸ்கர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உண்மை
நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும் வெளிவந்த உண்மைகளும்
வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், கார் உரிமையாளருக்கு வழங்கப்பட்ட பாலிசி ஆவணம் 4 பக்கங்களைக் கொண்டது என்றும், ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் 6 பக்கங்கள் கொண்ட புதிய விதிகளைக் காட்டி கிளைமை நிராகரித்துள்ளது என்றும் கண்டறிந்தது.
வாடிக்கையாளருக்கு வழங்கப்படாத மற்றும் மறைக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் காப்பீட்டை நிராகரிப்பது சேவைக்குறைபாடு மற்றும் நேர்மையற்ற வணிகச் செயலாகும் என நீதிமன்றம் சாடியது.
இதனால் மறைமுக விதிகள் வாடிக்கையாளரைக் கட்டுப்படுத்தாது எனத் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தது.
இழப்பீடு
ரூ.2.02 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு
பாதிக்கப்பட்ட கார் உரிமையாளருக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.1.75 லட்சமும், மன உளைச்சலுக்கு நிவாரணமாக ரூ.20,000 மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ.7,000 என மொத்தம் ரூ.2.02 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் உடனடியாக வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
காப்பீடு எடுக்கும்போது அதன் முழு பாலிசி ஆவணங்கள் மற்றும் விலக்கு விதிகளைப் பெற்றுச் சரிபார்ப்பதன் முக்கியத்துவத்தை இந்தத் தீர்ப்பு அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் உணர்த்தியுள்ளது.