பெப்பர்ஃபிரை நிறுவனத்தின் துணை நிறுவனர் அம்பரீஷ் மூர்த்தி காலமானார்
பெப்பர்ஃபிரை வணிக நிறுவனத்தின் துணை நிறுவனரான அம்பரீஷ் மூர்த்தி நேற்று இரவு 7 மணியளவில் மாரடைப்பின் காரணமாக உயரிழந்தார். இதனை, பெப்பர்ஃபிரை நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனரான அஷிஸ் ஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மும்பையில் இருந்து 'லே'க்கு பைக் ரைடிங் சென்றிருக்கின்றார் அம்பரீஷ் மூர்த்தி. அப்போது எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பலமுறை லேக்கு அவர் பைக் ரைடிங் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை ஆஷிஷ் ட்விட்டரில் பகிர்ந்தவுடன், பலரும் அம்பரீஷ் மூர்த்திக்கு தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
அம்பரீஷ் மூர்த்தி, கடந்து வந்த பாதை:
டெல்லி இன்ஜினியரிங் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், கொல்கத்தா இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்டில் எம்பிஏ பட்டத்தையும் பெற்றவர் அம்பரீஷ் மூர்த்தி. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு முன்னர் காட்பரி நிறுவனத்தில் இணைந்து தன்னுடைய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் அம்பரீஷ். ஐந்தரை ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தவர், பின்னர் ஐசிஐசிஐ AMC-யில் இணைந்திருக்கிறார். அங்கிருந்து பல்வேறு சின்னச்சின்ன மாற்றங்களுக்குப் பிறகு 2005-ல் இபே இந்தியா நிறுவனத்தில் இணைந்திருக்கிறார் அவர். அங்கே இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கான நிர்வாகியாக இருந்திருக்கிறார். இபே இந்தியா நிறுவனத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 2011-ல் ஆஷிஷ் ஷாவுடன் சேர்ந்து பெப்பர்ஃபிரை நிறுவனத்தைத் துவக்கியிருக்கிறார் அம்பரீஷ் மூர்த்தி. அவருடைய உயிரிழப்பு தனக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ஆஷிஷ் ஷா.