
இனி வங்கிக் கணக்குகளில் நான்கு நாமினிக்களை நியமிக்க முடியும்; வங்கி சட்டங்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்
செய்தி முன்னோட்டம்
வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது.
இதன் மூலம் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒருவருக்குப் பதிலாக நான்கு நாமினிக்களை நியமிக்க முடியும்.
இந்தத் திருத்தம் நிதி நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதையும் வங்கிகளில் கோரப்படாத வைப்புத்தொகையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூடுதல் விபரங்கள் இங்கே:-
முக்கிய மாற்றங்கள்
நாமினி நியமன விதிகளில் முக்கிய மாற்றங்கள்
முன்னர், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் மறைவின் போது நிதியைப் பெற ஒரு நாமினியை மட்டுமே நியமிக்க முடியும். இந்தத் திருத்தம் இப்போது பல நாமினிகளை நியமிக்க அனுமதிக்கிறது.
இது, மென்மையான சொத்து விநியோகத்தை உறுதி செய்கிறது. மேலும், இது ஒரே நேரத்தில் மற்றும் அடுத்தடுத்து என இரண்டு வகையான பரிந்துரைகளையும் அறிமுகப்படுத்துகிறது.
ஒரே நேரத்தில் நியமனம்: இதன்படி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வைப்புத்தொகையின் குறிப்பிட்ட சதவீதத்தை வெவ்வேறு நாமினிகளுக்கு ஒரே நேரத்தில் ஒதுக்கலாம்.
தொடர் நியமனம்: இந்த முறை ஒரு முன்னுரிமை வரிசையை உருவாக்குகிறது.
இதன்படி முதன்மை நாமினி அவற்றைக் கோர முடியாவிட்டால் அடுத்த கிடைக்கக்கூடிய நாமினிக்கு நிதி மாற்றப்படுவதை உறுதி செய்கிறது.
லாக்கர்
லாக்கர் நியமன விதிகள்
வங்கி சட்டத்தில் கூடுதலாக வங்கி லாக்கர் நியமன விதிகளும் திருத்தப்பட்டுள்ளது.
இரண்டு முறைகளும் பொருந்தும் வைப்பு கணக்குகளைப் போலன்றி, லாக்கர்கள் அடுத்தடுத்த நியமனத்தை மட்டுமே அனுமதிக்கும்.
வங்கி கணக்குகளில் உள்ள கோரப்படாத வைப்புத்தொகைகள் மார்ச் 2023 இல் ₹62,225 கோடியிலிருந்து மார்ச் 2024 இல் ₹78,213 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், இந்த திருத்தங்கள், குடும்பங்களுக்கு தடையற்ற நிதி பரிமாற்றங்களை உறுதி செய்வதோடு, வங்கிகளுக்கான சட்ட மோதல்கள் மற்றும் நிர்வாகச் சுமைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்னதாக, இந்த சட்டத் திருத்தம் இரண்டு நாட்களுக்கு முன்பு மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றவுடன் சட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.