ரூ.1 லட்சம் கோடி வரையிலான ஜிஎஸ்டி வரியை செலுத்தக் கோரி ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வரையிலான ஜிஎஸ்டி வரியை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது மத்திய அரசு. மேலும் இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள். இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மற்றும் சூதாட்ட நிறுவனங்கள், தங்களிடம் ஆன்லைன் விளையாட்டிற்காக டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு 28% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. டெல்டா கார்ப் மற்றும் ட்ரீம் 11 உள்ளிட்ட பல்வேறு நிறுனங்கள், மத்திய அரசு குறிப்பிட்ட வரியைச் செலுத்தாததற்கான காரணம் கேட்டும் அதனை செலுத்தக் கோரியும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்:
ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் கேஸினோ உள்ளிட்டவை மீது ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளானது கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் அமலாகியிருக்கிறது. இந்தப் புதிய சட்ட ஏற்பாட்டின் படி, வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் தளங்கள் இந்தியாவில் செயல்பட வேண்டுமென்றால் இந்தியாவிலும் முறைப்படி பதிவு செய்து உரிய வரியைச் செலுத்த வகையில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. பணத்தை வைத்து விளையாடப்படும் ஆன்லைன் கேமிங் இந்தியாவில் வளர்ந்து வரும் நிலையில், அவற்றில் பயனாளர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு 28% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என அறிவித்தது மத்திய அரசு. அதன்படியே இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களிடம் ஜிஎஸ்டி வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.