ஓலா கேப்ஸ் சிஇஓ ஹேமந்த் பக்ஷி ராஜினாமா
ஓலா கேப்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமந்த் பக்ஷி, பதவியேற்ற நான்கு மாதங்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஹேமந்த் பக்ஷி ஜனவரி மாதம் ஓலா நிறுவனத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ஓலா கேப்ஸ் நிறுவனம் ஒரு மறுசீரமைப்பு திட்டத்தை செய்லபடுத்தி வருவதால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 10 சதவீத பணியாளர்களுக்கு வேலையிழப்புகள் ஏற்படலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஐபிஓவை தொடங்குவதற்காக ஓலா கேப்ஸ், முதலீட்டு வங்கிகளுடன் பூர்வாங்க விவாதங்களைத் தொடங்கிய சில வாரங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில், ஓலா கேப்ஸ், கார்த்திக் குப்தாவை CFOஆகவும்(முன்னாள் P&G), சித்தார்த் ஷக்தேரை CBOஆகவும்(முன்னாள் ஹாட்ஸ்டார்) நியமித்துள்ளது.
சர்வதேச செயல்பாடுகளை மூடிய ஓலா கேப்ஸ்
ஓலா கேப்ஸ் நிறுவனம் ஒரு சில நாடுகளில் அதன் சர்வதேச செயல்பாடுகளை சமீபத்தில் மூடியது. "நாங்கள் எங்கள் முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்துள்ளோம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தற்போதைய வடிவத்தில் உள்ள எங்கள் வெளிநாட்டு வணிகத்தை மூட முடிவு செய்துள்ளோம். 1 பில்லியன் இந்தியர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எங்கள் பணியில் நாங்கள் மிகவும் உற்சாகமாக கவனம் செலுத்தி வருகிறோம்." என்று ஓலா கேப்ஸ் கூறியிருந்தது. 2023ஆம் நிதியாண்டில் ஓலாவின் மொபிலிட்டி வணிகம் ரூ.2,135 கோடி வருவாயைப் பதிவுசெய்தது, இது கிட்டத்தட்ட 58 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022ஆம் நிதியாண்டில் ரூ.66 கோடி ஈபிஐடிடிஏ இழப்பைப் பதிவு செய்த பிறகு, அந்த நிறுவனம் முதல்முறையாக ரூ.250 கோடி ஈபிஐடிடிஏவைப் பதிவு செய்தது.