யுபிஐ கட்டண முறைக்கு பெருகும் வரவேற்பு; 5,000 இருக்கைகளுடன் மும்பையில் உலகளாவிய தலைமையகத்தை அமைக்கிறது என்பிசிஐ
செய்தி முன்னோட்டம்
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ), அதன் சர்வதேச விரிவாக்க முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், மும்பையில் ஒரு உலகளாவிய தலைமையகம் மற்றும் 5,000 இருக்கைகள் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் பாந்த்ரா குர்லா வளாகத்தில் இந்த திட்டத்திற்காக நிலத்தை ஒதுக்கியுள்ளது.
யுபிஐ மற்றும் ரூபே நெட்வொர்க்களை இயக்கம் என்பிசிஐ, இந்தியாவின் டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பில் உலகளாவிய ஆர்வம் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் என்பிசிஐ அலுவலகத்திற்கு வந்து அதன் கட்டண நெட்வொர்க் அமைப்பை ஆய்வு செய்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி திலீப் அஸ்பே தெரிவித்தார்.
உலகளாவிய ஒத்துழைப்பு
புதிய மையம் உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்தும்
மும்பை தொழில்நுட்ப வாரத்தில் பேசிய ஆஸ்பே, புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் கட்டண தொழில்நுட்பங்களில் புதுமைகளை மேம்படுத்தும் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் என்று வலியுறுத்தினார்.
அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, என்பிசிஐ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட ஏழு நாடுகளில் யுபிஐயை செயல்பட வைத்துள்ளது.
கூடுதலாக, பெரு, நமீபியா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ போன்ற நாடுகளுடன் இணைந்து அவர்களின் சொந்த கட்டண முறைகளை உருவாக்கி வருகிறது.
இதற்கிடையே, யுபிஐ நெட்வொர்க்கில் 80க்கும் மேற்பட்ட யுபிஐ செயலிகள் மற்றும் 641 வங்கிகள் பங்கேற்கும் நிலையில், என்பிசிஐ உலகளவில் டிஜிட்டல் கட்டண முறைகளில் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.