75% சொத்தை வாழ்க்கை பொருளுதவியாக கோரும் கௌதம் சிங்கானியாவின் மனைவி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான ரேமண்ட்ஸ் வணிக குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கௌதம் சிங்கானியா, தன்னுடைய மனைவியான நவாஸ் மோடி சிங்கானியாவுடனான திருமண வாழ்வில் இருந்து பிரிவதாகக் கடந்த நவம்பர் 13ம் தேதி அறிவித்தார்.
கணவன்-மனைவி இருவருக்குமிடையே பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக வதந்திகள் பலவும் பரவி வந்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டார் அவர்.
1999-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவருக்கும் நிகாரிகா மற்றும் நிசா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது தனக்கும் தங்களது மகள்களுக்கும் சேர்த்து, கௌதம் சிங்கானியாவின் சொத்து மதிப்பில் 75%-தத்தைக் குடும்ப தீர்வாக நவாஸ் கோரியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
வணிகம்
கௌதம் சிங்கானியாவின் சொத்து மதிப்பு:
11,000 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட கௌதம் சிங்கானியா, தன்னுடைய முன்னாள் மனைவி நவாஸ் மோடி சிங்கானியாவின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், குடும்பச் சொத்து அனைத்தையும், குடும்ப அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி அதன் மூலமாகவே தான் வழங்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கும் கௌதம் சிங்கானியா, அந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் தானே செயல்பட வேண்டும் என நிபந்தனையாகத் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், கௌதம் சிங்கானியாவின் இந்த நிபந்தனையை நவாஸ் மோடி சிங்கானியா ஏற்றுக் கொள்ள மறுப்பதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையில் சட்டரீதியில் சுமூகமான முறையில் தீர்வு காண தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவாகரத்து
இந்திய அறக்கட்டளைச் சட்டம் கூறுவது என்ன?
ஒரு அறக்கட்டளையானது, மூன்று கட்சிகள் சேர்ந்த ஒரு அமைப்பு. ஒரு அறக்கட்டளையை உருவாக்குபவர் அல்லது அதற்கு நிதியளிப்பவர் முதல் கட்சி.
அந்த அறக்கட்டளையை நிர்வாகம் செய்யும் நிர்வாக அறங்காவலர், இரண்டாம் கட்சி. அறக்கட்டளையின் மூலம் பயன் பெறுபவர்கள் மூன்றாம் கட்சி.
கௌதம் சிங்கானியா இதில் முதல் கட்சியைச் சேர்ந்தவர். எனினும், அவரே இரண்டாம் கட்சியாகவும், அதாவது நிர்வாக அறங்காவலராகவும் செயல்படுவதற்கான சட்டத்தில் இடமிருக்கிறது.
ரேமண்ட்ஸ் குழுமத்தின் 'சுனிதாதேவி சிங்கானியா அறக்கட்டளை'யானது மேற்கூறிய அமைப்பில் கூறப்பட்டதன் படி, நிதி அளிப்பவரே நிர்வாக அறங்காவலாரக இருக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.