டிசம்பர் 6 முதல் தினமும் 23 மணி நேரம் அமெரிக்கப் பங்குச் சந்தை செயல்படும்; இந்திய முதலீட்டாளர்களுக்கு என்ன பலன்?
செய்தி முன்னோட்டம்
உலக பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமெரிக்காவின் நாஸ்டாக் மற்றும் நியூயார்க் பங்குச் சந்தை ஆகியவை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் வாரத்தில் 5 நாட்களும் தினமும் 23 மணி நேரம் பங்கு வர்த்தகத்தைத் தொடங்க உள்ளன. தற்போதுள்ள வழக்கமான சந்தை நேரங்களுடன் இணைந்து அமெரிக்க நேரப்படி இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை புதிய இரவு நேர வர்த்தக அமர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் மட்டுமே வர்த்தக இடைவெளி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு இடைவெளி
ஒரு மணி நேர பராமரிப்பு இடைவெளி மற்றும் தொடக்க முடிவு விலை நடைமுறைகள்
தினசரி இரவு 8 மணி முதல் 9 மணி வரை வழங்கப்படும் ஒரு மணி நேர வர்த்தக இடைவெளியில் கணினிப் பராமரிப்புப் பணிகள் நிறுவனங்களின் கார்ப்பரேட் நடவடிக்கைகள் மற்றும் பங்குத் தீர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என நாஸ்டாக் தெரிவித்துள்ளது.
இந்த புதிய 23 மணி நேர வர்த்தக முறையிலும் வழக்கமான சந்தை தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் அதிகாரப்பூர்வ விலையை நிர்ணயிக்கும் ஓப்பனிங் மற்றும் குளோசிங் கிராஸ் நடைமுறைகள் தொடர்ந்து செயல்படும்.
மேலும் அமெரிக்க பங்குச் சந்தையின் வழக்கமான பொது விடுமுறை நாட்களிலும் இந்த 23 மணி நேர வர்த்தகத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வர்த்தக வாய்ப்பு
இந்திய முதலீட்டாளர்களுக்கு இனி பகல் நேரத்திலேயே அமெரிக்க பங்குகளில் வர்த்தக வாய்ப்பு
இந்த புதிய கால அட்டவணை இந்திய முதலீட்டாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ஏனெனில் இனி அவர்கள் நள்ளிரவு வரை விழித்திருந்து அமெரிக்க பங்குகளை வர்த்தகம் செய்ய வேண்டியதில்லை.
இந்திய நேரப்படி முதல் இரவு நேர அமர்வு வரும் டிசம்பர் 7 திங்கட்கிழமை காலை 7:30 மணிக்குத் தொடங்கி மதியம் 2:30 மணி வரை நடைபெறும் என்பதால் இந்திய சந்தை நேரத்திலேயே அமெரிக்க பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியும்.
வாராந்திர வர்த்தகம் திங்கட்கிழமை காலை 7:30 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை காலை 6:30 மணி வரை தினமும் ஒரு மணி நேர இடைவெளியுடன் தொடர்ந்து நடைபெறும்.
நிபுணர்கள் எச்சரிக்கை
குறைந்த பணப்புழக்கம் மற்றும் கூடுதல் செலவுகள் குறித்துப் பங்குச் சந்தை நிபுணர்கள் எச்சரிக்கை
அமெரிக்க நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் மற்றும் ஃபெடரல் ரிசர்வ் அறிவிப்புகளுக்கு ஏற்ப இந்திய முதலீட்டாளர்கள் உடனடியாக செயல்பட இந்தத் திட்டம் உதவும் என நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.
அதேநேரத்தில் இரவு நேர அமர்வில் பணப்புழக்கம் குறைவாகவும் விலை ஏற்ற இறக்கம் அதிகமாகவும் இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என எஸ்எம்சி குளோபல் செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் சீமா ஸ்ரீவஸ்தவா அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த அமர்வில் லிமிட் ஆர்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதோடு நாணய மாற்றுச் செலவுகள் கூடுதல் தரகுக் கட்டணம் மற்றும் வரி விதிகளையும் கருத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.