
புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிடும் முருகப்பா குழுமம்
செய்தி முன்னோட்டம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகளவில் செமிகண்டக்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் முதல் கார் மற்றும் பைக் வரையிலான ஆட்டோமொபைல் வரை செமிகண்டக்டர்களின் பயன்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் மற்றும் முக்கிய செமிகண்டக்டர் உற்பத்தியாளரான தைவான் செமிகண்டக்டர் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செமிகண்டக்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால், மின்னணு சாதன தயாரிப்பு மற்றும் ஆட்டோமொபைல் தயாரிப்புத் துறை சற்று பாதிக்கப்பட்டது. உலகளவில் செமிகண்டக்டர் தட்டுப்பாடு ஏற்படுத்திய தாக்கத்தினைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் சொந்தமாக தாங்களே செமிகண்டக்டர் தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டமிட்டன.
இந்தியா
செமிகண்டக்டர் தயாரிப்பில் இந்திய அரசின் திட்டம்:
இந்திய அரசும் பல்வேறு துறைகளிலும் தன்னிறைவடைய திட்டமிட்டு வருகிறது. அதன்படி, இந்தியாவில் செமிகண்டக்டர் தொழிற்சாலைகளை நிறுவவும் அழைப்பு விடுத்து, மாணியத் திட்டங்களையும் வகுத்திருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரான் உள்ளிட்ட சில செமிகண்டக்டர் நிறுவனங்கள் இந்தியாவில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்திருக்கும் நிலையில், இந்தியாவில் சென்னையைச் சேர்ந்த முருகப்பா குழுமமும் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை கட்டமைக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறது.
முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த 'CG பவர் மற்றும் இன்ட்ஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ்' நிறுவனம், இந்தியாவில் புதிய OSAT செமிகண்டக்டர் தொழிற்சாலையை நிறுவவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
வணிகம்
CG பவர் மற்றும் இன்ட்ஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ்:
கடனால் தத்தளித்து வந்த CG பவர் நிறுவனத்தை, தங்களுடைய டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் 2020ம் ஆண்டு கையகப்படுத்தியது முருகப்பா குழுமம். CG பவரின் 58% பங்குகள் டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்திடமே உள்ளது.
எனவே இந்நிறுவனத்தின் மூலம் 791 மில்லியன் டாலர்கள் மதிப்பில் (இந்திய மதிப்பில் ரூ.6,600 கோடி) புதிய செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்டிங் தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டை அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கும் நிலையில், புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதிகளையும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடமிருந்து பெற முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.