சுயசார்பு கொள்கையால், மைக்ரோசாப்ட் செயலிழப்பினால் பெரிதும் பாதிப்படாத சீனா
நேற்று, ஜூலை 19 அன்று, உலக நாடுகளை போலவே சீனாவில் உள்ள வெளிநாட்டு வணிகங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களை பாதித்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பு, அந்த நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பை, விமான நிறுவனங்கள் முதல் வங்கிகள் வரை பாதிக்கவில்லை. இதனை தொழில்துறை ஆதாரங்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி நிலவரப்படி, உலகமே ஸ்தம்பித நேரத்தில், சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உள்கட்டமைப்பு சீர்குலைவுகள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை.
உலகெங்கும் பாதிக்கப்பட்ட விமான சேவைகள்
மைக்ரோசாப்ட் செயலிழப்பால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஹாங்காங் முதல் ஆஸ்திரேலியா வரையிலான பல விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஒரு சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் வழக்கம் போல் இயங்கியதாக அவர்களின் இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயசார்பு கொள்கை
நாடு முழுவதும் உள்ள பல வெளிநாட்டு வணிக அலுவலகங்கள் செயலிழப்பால் பாதிக்கப்பட்டன. எனினும், சீனாவின் பொதுச் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை. இதற்கு காரணமாக, மைக்ரோசாப்ட் மற்றும் வைரஸ் தடுப்பு நிறுவனமான CrowdStrike போன்ற வெளிநாட்டு சேவை வழங்குநர்கள் மீது சீனா பெரிதாக சார்ந்தில்லாமல் இருப்பது. சமீபத்திய ஆண்டுகளில், வெளிநாட்டு வன்பொருள் மற்றும் அமைப்புகளை உள்நாட்டில் மாற்றுவதற்கு சீனா தனது அரசாங்கத் துறைகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு ஆபரேட்டர்களை கட்டாயமாக்கி உள்ளது. சீனாவில் மைக்ரோசாப்ட் செயலிழப்பின் குறைந்தபட்ச தாக்கம், "பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய" கணினி அமைப்புகளின் இலக்கை அடைவதில் நாடு சுயசார்புடன் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது என்று சீன அரசாங்க ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.