ஜூன் முதல் 30 நிமிட டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது ஜியோமார்ட்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் துணை நிறுவனமான ஜியோமார்ட் மூலம் 30 நிமிடங்களுக்கு குறைவான டெலிவரி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய சேவை ஜூன் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது என்றும், ஆரம்பத்தில் ஏழு முதல் எட்டு நகரங்களில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த விரைவான விநியோக சேவையை இந்தியா முழுவதும் 1,000 நகரங்களுக்கு விரிவுபடுத்துவதை ரிலையன்ஸ் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. விரைவான வணிகச் செயல்பாடுகளைச் செயல்படுத்த, ரிலையன்ஸ் ரீடெய்லுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் மையங்களின் விரிவான நெட்வொர்க்கைப் பயன்படுத்த ஜியோமார்ட் திட்டமிட்டுள்ளது.
ஜியோமார்ட் எக்ஸ்பிரஸ் சேவை ஒரு வருடத்திற்கு முன் நிறுத்தப்பட்டது
இந்த புதிய திட்டம் விரைவு வர்த்தகத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் டார்க் ஸ்டோர் மாடலில் இருந்து வேறுபட்டதாகும். டார்க் ஸ்டோர் மாடல் என்பது ஆன்லைன் விற்பனைக்காக பொருட்கள் பெரிய கிடங்குகளில் சேமிக்கப்படும் மாடலாகும். இதில் இருந்து ரிலையன்ஸ் மாறுபடுவதால், இந்த நடவடிக்கை ஜியோமார்ட்டுக்கு சந்தையில் போட்டித்தன்மையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோமார்ட் எக்ஸ்பிரஸ் என்ற 90 நிமிட மளிகை விநியோக சேவையை ரிலையன்ஸ் நிறுத்தி ஒரு வருடம் ஆகும் நிலக்கியில், அந்த நிறுவனம் விரைவான வர்த்தகத்தில் இறங்கியுள்ளது. தற்போது, ஜியோமார்ட் அதன் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த நாள் டெலிவரி விருப்பங்களை வழங்கி வருகிறது. இது 30 நிமிட டெலிவரி வசதியாக மாற்றப்பட உள்ளது.