
இத்தாலியின் ஃபேஷன் ப்ராண்டான Prada, போட்டியாளரான Versace-ஐ $1.4 பில்லியனுக்கு வாங்கவுள்ளது
செய்தி முன்னோட்டம்
இத்தாலியின் பிரபலமான இரண்டு பெரிய ஃபேஷன் பிராண்டுகள் தற்போது ஒன்றிணையவுள்ளது.
அதன்படி தனது போட்டியாளரான வெர்சேஸை(Versace) கேப்ரி ஹோல்டிங்ஸிடமிருந்து வாங்க பிராடா (Prada) ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் 1.375 பில்லியன் அமெரிக்க டாலர் நிறுவன மதிப்பைக் கொண்டுள்ளது என்று பிராடா வியாழக்கிழமை தெரிவித்தது.
ஆடம்பர தேவையில் ஏற்பட்ட மந்தநிலையை மீறி பிராடா தனது வணிகத்தை விரிவுப்படுத்த முயல்கிறது.
அதே நேரத்தில் வெர்சேஸ் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த இணைப்பு பிரெஞ்சு கூட்டு நிறுவனங்களால் வழிநடத்தப்படும் ஆடம்பர ஃபேஷன் துறையில் இத்தாலியின் கையை மேலும் வலுப்படுத்துகிறது.
அறிக்கை
ஒப்பந்த அறிக்கை குறித்து பிராடா கூறுவது என்ன?
"வெர்சேஸின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கொண்டாடுவதையும், அதன் துணிச்சலான மற்றும் காலத்தால் அழியாத அழகியலை மறுபரிசீலனை செய்வதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று பிராடா தலைவர் பாட்ரிசியோ பெர்டெல்லி கூறினார்.
"அதே நேரத்தில், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் முதலீடுகளால் வலுப்படுத்தப்பட்டு, நீண்டகால உறவுகளில் வேரூன்றிய ஒரு வலுவான தளத்தை நாங்கள் அதற்கு வழங்குவோம்," என்று அவர் மேலும் கூறினார்.
வெர்சேஸுக்கு பிராடா கொடுக்க ஒப்புக்கொண்ட விலை, 2018 ஆம் ஆண்டில் காப்ரி, வெர்சேஸுக்கு செலுத்திய கடனை உள்ளடக்கிய தோராயமாக 2.15 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு குறைவுதான்.
முன்பு மைக்கேல் கோர்ஸ் என்று அழைக்கப்பட்ட காப்ரி, வெர்சேஸ் குடும்பம் மற்றும் பிளாக்ஸ்டோனிடமிருந்து வெர்சேஸை வாங்கியது.