சேலத்திற்கு வருகிறது அமெரிக்க நிறுவனமான Deloitte
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் அதிக முதலீடு பெற்று புது தொழிற்சாலைகளை அமைக்கப்பெற்று வேலையில்லா திண்டாட்டத்தினை ஒழிக்கும் எண்ணத்தோடு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்கள் வளர்ச்சி அடையும் பட்சத்தில், ஒட்டுமொத்த மாநிலமும் வளர்ச்சியடைய கூடும் என்பதால் சென்னையை தாண்டி பிற மாவட்டங்களை மையமாக வைத்தும் புது முதலீடுகள் ஈர்க்கப்பட்டது.
அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் அதிகளவு முதலீடுகள் பெற்று, வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்களையும் ஈர்த்தது கோயம்பத்தூர்.
சென்னையை அடுத்து அதிகளவு வேலை வாய்ப்பினையும் இந்த மாவட்டம் உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே கோயம்பத்தூர், திருப்பூரை அடுத்து தற்போது சேலம் மாவட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கவனத்தினை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலம்
இந்தியாவில் 16 நகரங்களில் 18 இடங்களில் செயல்பட்டு வரும் டெலாய்ட் நிறுவனம்
சேலத்தில் அதிகத்திறன் கொண்ட ஊழியர்கள், பட்டதாரிகளுக்கு பஞ்சமில்லா நிலையில், இங்கு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட விமான சேவை பல்வேறு தரப்பின் கவனத்தினை ஈர்த்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சர்வதேச கார்ப்பரேட் கணக்கியல் துறையில் பிக் 4 என்று கூறப்படும் நிறுவனங்களில் ஒன்றான டெலாய்ட் நிறுவனம் சேலத்தில் ஓர் புதிய அலுவலகத்தினை துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சேலத்தில் மட்டுமல்லாமல் மதுரையிலும் இந்நிறுவனம் தனது புது அலுவலகத்தினை திறக்கவுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
தற்போதுவரை அமெரிக்கா நிறுவனமான டெலாய்ட் இந்தியாவில் 16 நகரங்களில் 18 இடங்களில் அலுவலகங்கள் திறந்து செயல்பட்டு வருகிறது.
புதிதாக சேலம் மற்றும் மதுரையில் அலுவலகங்கள் திறக்கப்படும் பட்சத்தில் இதன் எண்ணிக்கை 18 நகரங்கள் என உயரவுள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.