Loading...
43 நாடுகளுக்கு விரிவடைந்த கச்சா எண்ணெய் வர்த்தகம்! சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் அதிரடி வியூகம்
43 நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது இந்தியா

43 நாடுகளுக்கு விரிவடைந்த கச்சா எண்ணெய் வர்த்தகம்! சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் அதிரடி வியூகம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 03, 2026
08:24 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச அளவில் ஏற்படும் புவிசார் அரசியல் நெருக்கடிகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதி ஆதாரங்களை 27-லிருந்து 43 நாடுகளாக உயர்த்தியுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா இத்தகவலை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். சர்வதேசப் பொருளாதாரத்துடன் தொடர்ந்து இணைந்திருக்கும் அதேவேளையில், ஒரே ஒரு நாட்டைச் சார்ந்திருப்பதைத் தவிர்ப்பதே இந்த வியூகத்தின் முதன்மை நோக்கமாகும்.

ஆற்றல் பாதுகாப்பு

ஆற்றல் தேவை மற்றும் சர்வதேசச் சந்தையின் அழுத்தங்கள்

இந்தியாவின் உள்நாட்டு ஆற்றல் தேவையில் சுமார் 90 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.

இதனால் சர்வதேச அளவில் ஏற்படும் போர் சூழல்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதிப்புகள் நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ஒரு டாலர் உயர்த்தப்பட்டாலும், இந்தியாவின் ஆண்டு இறக்குமதி செலவு பல ஆயிரம் கோடிகள் அதிகரிக்கும்.

இந்த அபாயத்தைக் குறைக்கவும், விலை உயர்வைச் சமாளிக்கவும் இறக்குமதி செய்யும் நாடுகளின் வரம்பை இந்தியா தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.

ஆத்மநிர்பர் பாரத்

ஆத்மநிர்பர் பாரத் மற்றும் அத்தியாவசிய கனிமங்கள் பாதுகாப்பு

ஆத்மநிர்பர் பாரத் என்பதன் உண்மையான நோக்கம் வெளிநாடுகளுடனான வர்த்தகத்தை முற்றிலும் துண்டிப்பது அல்ல என்று பி.கே.மிஸ்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு சந்தைகளில் ஏற்படும் திடீர் முடக்கங்களைத் தாங்கும் வல்லமையைப் பெறுவதே சுயசார்பு நிலை ஆகும்.

கச்சா எண்ணெயை போலவே பசுமை ஆற்றல் மாற்றத்திற்குத் தேவைப்படும் முக்கியமான கனிமங்கள் சில நாடுகளின் கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளன.

இவற்றை எதிர்கொள்ள தேசிய அத்தியாவசிய கனிமங்கள் இயக்கத்தின் மூலம் உள்நாட்டு ஆய்வு மற்றும் சுத்திகரிப்புப் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

பொருளாதாரம்

உள்நாட்டு உற்பத்தித் திறன் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை

மின்னணுவியல், செமிகண்டக்டர் மற்றும் மருந்தியல் போன்ற உத்திசார் துறைகளில் இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தித் திறனைப் பெருக்கி வருகிறது.

கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி பல மடங்கு உயர்ந்து ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுடன் இந்தியா புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

வலுவான அந்நியச் செலாவணி இருப்பு மற்றும் முறையான நிதிக் கொள்கை மூலம் இந்தியா தனது பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT