
இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலை 8க்குள் இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனத் தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவும் அமெரிக்காவும் ஜூலை 8 ஆம் தேதிக்குள் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது வரி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கவும் இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியப் பொருட்களுக்கு 26 சதவீத பரஸ்பர வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்ததைத் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
பேச்சுவார்த்தை நடப்பதைத் தொடர்ந்து, ஜூலை 9 வரை 90 நாட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
எனினும், இந்த காலகட்டத்தில், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 10 சதவீத அடிப்படை வரி நீடித்து வருகிறது.
முழு விலக்கு
முழு விலக்கு பெற இந்தியா பேச்சுவார்த்தை
கூடுதல் மற்றும் அடிப்படை வரிகளிலிருந்து முழு விலக்கு அளிக்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
குறிப்பாக ஜவுளி, தோல், ரசாயனங்கள் மற்றும் விவசாயம் போன்ற முக்கிய துறைகளை பாதுகாப்பதற்காக இந்த பேச்சுவார்த்தையை இந்தியா முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்மொழியப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் பொருட்கள், டிஜிட்டல் சேவைகள் மற்றும் வரி அல்லாத தடைகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பால் மற்றும் விவசாய பொருட்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் ஒதுக்கீடுகள் அல்லது குறைந்தபட்ச இறக்குமதி விலைகள் மூலம் பாதுகாக்கப்படலாம்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் வாஷிங்டனுக்கு சென்று, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் மற்றும் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ஆகியோரை சந்தித்து விவாதங்களை துரிதப்படுத்தினார்.
பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை எப்போது நிறைவு பெறும்?
இரு நாடுகளின் தலைமை பேச்சுவார்த்தையாளர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், ஆடைகள், பிளாஸ்டிக், இறால் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற ஏற்றுமதிகளுக்கும் வரிச் சலுகைகளை நாடுகிறது.
அதற்கு ஈடாக, தொழில்துறை பொருட்கள், மின்சார வாகனங்கள், ஒயின்கள், பெட்ரோ கெமிக்கல்ஸ், பால் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்ற துறைகளில் இந்திய சந்தைகளில் அணுகலை அமெரிக்கா வலியுறுத்துகிறது.
இருப்பினும் இந்தியா மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இறக்குமதிகளில் எச்சரிக்கையாக உள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
இந்தியா 41 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் பொருட்கள் வர்த்தக உபரியைக் கொண்டுள்ளது.