உலகின் 12% கப்பல் ஊழியர்கள் இந்தியர்கள்தான்! மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தகவல்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கடல்சார் வணிக கப்பல் துறையில் இந்தியா ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. உலகளவில் அதிக கப்பல் ஊழியர்களை விநியோகிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இதன்படி, சர்வதேச கடல்சார் பணியாளர்களில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 12 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் இந்திய கடல்சார் பணியாளர்களின் எண்ணிக்கை 1.27 லட்சத்திலிருந்து 3.23 லட்சமாக கணிசமாக உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி
2015-க்கு பிறகு இந்தியாவின் அபார வளர்ச்சி
அமைச்சர் கூறியதன்படி, கடந்த 2015 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டங்களால் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்திய கடல்சார் ஊழியர்களின் தொழில்முறைத் திறனும், அர்ப்பணிப்பும் உலக நாடுகளின் கப்பல் நிறுவனங்களிடம் பெரும் நம்பிக்கையைப் பெற்றுத் தந்துள்ளன.
இளைஞர்களுக்கு அளிக்கப்படும் உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகள் மற்றும் புதிய கல்வி உள்கட்டமைப்புகளே இந்த மாபெரும் வளர்ச்சிக்கு முதன்மையான காரணங்களாக அமைந்துள்ளன.
பெண்களின் பங்களிப்பு
கடல்சார் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு
இத்துறையில் பெண்களின் பங்கேற்பும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக உயர்ந்துள்ளது.
சாகர் மேன் சம்மான் என்ற சிறப்பான முயற்சியின் காரணமாக, 2021-இல் 1,599 ஆக இருந்த பெண் கடல்சார் ஊழியர்களின் எண்ணிக்கை, தற்போது 7,033 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இத்துறையில் பெண்களின் பங்களிப்பை 20 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கப்பல் கட்டும் திறன்
உள்நாட்டிலேயே கப்பல் கட்டும் திறனை உயர்த்த திட்டம்
வெறும் கப்பல் பணியாளர்களை உருவாக்குவதுடன் நின்றுவிடாமல், உள்நாட்டிலேயே கப்பல் கட்டும் திறன் மற்றும் கப்பல்களைப் பழுதுபார்க்கும் அமைப்புகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் நார்வே போன்ற சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்த உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மூலம் நாட்டின் சுயசார்புத்தன்மை அதிகரிப்பதுடன், இந்திய இளைஞர்களுக்குக் கடல்சார் துறையில் இலட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.