இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 652.869 பில்லியன் டாலராக குறைவு; ஆர்பிஐ தகவல்
டிசம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1.988 பில்லியன் டாலர் குறைந்து 652.869 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) தெரிவித்துள்ளது. முந்தைய அறிக்கை வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 3.235 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 654.857 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த சில வாரங்களாக கையிருப்பு குறைந்து வருகிறது. மேலும், ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கங்களைக் குறைக்க ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி சந்தை தலையீடுகளுடன், மறுமதிப்பீடும் சரிவுக்குக் காரணமாகும். முன்னதாக, செப்டம்பரில் அந்நிய செலாவணி கையிருப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 704.885 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு நாணய சொத்துக்களின் மதிப்பு குறைவு
டிசம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணயச் சொத்துக்கள் 3.047 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 562.576 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க டாலர் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும், அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ள யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற அமெரிக்க அல்லாத யூனிட்களின் மதிப்பு அல்லது தேய்மானத்தின் விளைவு வெளிநாட்டு நாணய சொத்துக்களில் அடங்கும். சர்வதேச நாணய நிதியத்துடனான இந்தியாவின் இருப்பு நிலை, அறிக்கை வாரத்தில் 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 4.24 பில்லியன் டாலராக உள்ளது என்று ஆர்பிஐ வெளியிட்டுள்ள தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.