உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்தது இந்தியா
ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்களால் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்தியாவின் பங்குச் சந்தை முதன்முறையாக ஹாங்காங்கை முந்தி சாதனை படைத்துள்ளது. ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மொத்த மதிப்பு திங்கள்கிழமையின் முடிவில் $4.33 டிரில்லியனை எட்டியது. இது ஹாங்காங்கின் $4.29 டிரில்லியனை விட 0.04 டிரில்லியன் அதிகமாகும். அதனால், இந்தியா உலக அளவில் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக மாறியுள்ளது. இந்திய பங்குச் சந்தையின் மூலதனம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி முதல் முறையாக $4 டிரில்லியனைத் தாண்டியது. அதில் பாதி கடந்த நான்கு ஆண்டுகளில் முதலீடு செய்யப்பட்டவையாகும்.
இந்தியாவின் பங்குச் சந்தைகள் வளர்ச்சி
வேகமாக வளர்ந்து வரும் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் வலுவான கார்ப்பரேட் வருவாயின் காரணமாக, இந்தியாவின் பங்குச் சந்தைகள் வளர்ச்சியடைந்து வருகின்றன. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, உலக முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து புதிய மூலதனத்தை ஈர்த்து, சீனாவிற்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. "வளர்ச்சி வேகத்தை மேலும் அதிகரிக்க தேவையான அனைத்தும் இந்தியாவில் இருக்கிறது." என்று மும்பையில் உள்ள ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்டின் தலைமை முதலீட்டு அதிகாரி ஆஷிஷ் குப்தா கூறியுள்ளார். இந்தியப் பங்குகளில் ஏற்பட்ட இடைவிடாத ஏற்றத்தாலும், சீனாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ள ஹாங்காங் பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவினாலும் இந்தியாவால் ஹாங்காங்கை பின்னுக்கு தள்ள முடிந்திருக்கிறது.