இந்தியா - நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்து: 8,200+ பொருட்களுக்கு வரி இல்லை, யாருக்கெல்லாம் வேலை கிடைக்கும்?
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்(FTA) இன்று புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் முறைப்படி கையெழுத்தாகிறது. மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர். ஒன்பது மாதங்களில் எட்டப்பட்ட இந்த வேகமான ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள 1.3 பில்லியன் டாலர் வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த முதல் நாளிலிருந்தே, இந்தியாவின் 8,284 ஏற்றுமதி பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தையில் 100% வரி விலக்கு கிடைக்கும்.
சலுகைகள்
இந்தியாவுக்கு கிடைக்கும் மாபெரும் சலுகைகள்
ஆயத்த ஆடைகள், கைத்தறிப் பொருட்கள் மற்றும் தரைவிரிப்புகளுக்கு உடனடி வரி விலக்கு கிடைப்பதால், திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களின் ஏற்றுமதி அதிகரிக்கும். ஆக்ராவின் புகழ்பெற்ற தோல் காலணிகள் மற்றும் பிற தோல் பொருட்களுக்கான வரி 5%-லிருந்து பூஜ்யமாகக் குறையும். தச்சு வேலை செய்பவர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழிலாளர்களுக்குச் சர்வதேச அளவில் புதிய வாய்ப்புகள் உருவாகும். இந்திய மருந்து நிறுவனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு நியூசிலாந்தில் விரைவான அனுமதி (Fast-track regulatory access) கிடைக்கும். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தரச் சான்றிதழ்களை நியூசிலாந்து ஏற்றுக்கொள்வதால் செலவுகள் குறையும்.
மருத்துவம்
ஆயுஷ் (AYUSH), மாவோரி மருத்துவம் மற்றும் விசா சலுகைகள்
நியூசிலாந்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் முதன்முறையாக ஆயுஷ் (Ayurveda, Yoga, Unani, Siddha, Homeopathy) மருத்துவ முறைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் பூர்வீக 'மாவோரி' (Māori) மருத்துவ முறைகளுடன் இணைந்து இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளும் அங்கு ஊக்குவிக்கப்படும். இந்தியப் பணியாளர்களுக்கு நியூசிலாந்து சில முக்கியச் சலுகைகளை வழங்கியுள்ளது: தற்காலிக விசா: இந்தியப் பணியாளர்களுக்காக ஆண்டுக்கு 1,667 விசாக்கள் வழங்கப்படும். மாணவர்கள்: நியூசிலாந்தில் உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்குப் படிப்பிற்குப் பிந்தைய பணி உரிமைகள் (Post-study work rights) எளிதாக்கப்படும்.
பாதுகாப்பு
இந்திய அரசு பாதுகாத்துள்ள துறைகள்
உள்நாட்டு விவசாயிகளையும் பால் உற்பத்தியாளர்களையும் பாதுகாக்க, சுமார் 29.97% இறக்குமதிப் பொருட்களுக்கு இந்தியா வரிச் சலுகை அளிக்கவில்லை. பால், வெண்ணெய், தயிர், சீஸ் போன்ற பொருட்கள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. இதோடு, வெங்காயம், கடலை, பருப்பு வகைகள், சர்க்கரை மற்றும் சோளம் உள்ளிட்ட விவசாய பொருட்களும், தங்கம், வைரம், ஆபரணங்கள் மற்றும் தாமிரம் உள்ளிட்ட உலோகங்களும் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. நியூசிலாந்தின் கம்பளி (Wool), ஒயின், மரம், நிலக்கரி மற்றும் அவகேடோ, ப்ளூபெர்ரி போன்ற பழங்களுக்கு இந்தியச் சந்தையில் வரிச் சலுகை கிடைக்கும். மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 20 பில்லியன் டாலர் முதலீடுகளை கொண்டு வர நியூசிலாந்து உறுதியளித்துள்ளது.