
ரஷ்யா வர்த்தகம் தொடர்பாக நேட்டோ இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக இந்தியா எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா போன்ற நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே எச்சரித்ததைத் தொடர்ந்து, நேட்டோவிற்கு இந்தியா கடுமையான எச்சரிக்கையை விடுத்தது. மார்க் ரூட்டேவின் கருத்துகளுக்கு பதிலளித்த இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், எரிசக்தி தேவைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் முன்னுரிமையை வலியுறுத்தினார் மற்றும் உலகளாவிய வர்த்தக நடைமுறைகளில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவதாக விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்க செனட்டர்களுடனான ஒரு சந்திப்பின் போது, இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்யாவுடனான வணிக உறவுகளைக் குறைக்காவிட்டால் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மார்க் ரூட்டே கூறியிருந்தார்.
விளாடிமிர் புடின்
விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்க அறிவுறுத்தல்
இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகளின் தலைவர்களை அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியை 27 முதல் 40 நாடுகளுக்கு பல்வகைப்படுத்தியுள்ளதால், எந்தவொரு இடையூறுக்கும் தயாராக உள்ளது என்று வலியுறுத்தினார். இதற்கிடையே, ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தப்படாவிட்டால், அதிக வரி விதிப்பை மேற்கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், அமெரிக்க ஆயுதங்கள் ஐரோப்பிய நாடுகள் மூலம் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.